பெண்டிர் தொழில்நலம் என்றும் ஒன்றூக்கல் – நான்மணிக்கடிகை 85

இன்னிசை வெண்பா

ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் - என்றும்
நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்
நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல் 85

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

பெண்மக்களின் தொழிற்சிறப்பு எந்நாளும் தங்கணவரோடு ஒருமைப்பட்டு முயன்று ஒழுகலாம்;

அந்தணரின் கருத்து இனிய எண்ணங்களையே முயன்று எழுவித்துக் கொண்டிருத்தலாம்;

அரசரின் தொழிற்சிறப்பு வேற்றரசன் அரசாள்கின்ற நாட்டினைக் கொள்ள முயன்றொழுகலாம்;

சுற்றத்தாரை நீக்கி விடுதல் கேட்டுக்கு முயறலாகும்.

கருத்து:

கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நற்செய்கையாகும்;
அற நினைவுகளை எழுப்பிக் கொண்டிருக்க முயலுதலே அந்தணருள்ளத்துக்குச் சிறப்பு;
பிறன் ஆளும் நாட்டைப் பெற முயலுதலே மன்னர்க்கு உரிய செய்கையாம்;
சுற்றத்தாரை நீக்கி வாழ்தல் கேட்டுக்கு முயலுதலேயாகும்.

விளக்கவுரை:

ஊக்கம் - முயறல். தொழில் நலம் - தொழிலின் நன்மை; ஒன்றென்றது ஈண்டு ஒன்றாங் கருத்துடையது.

தன்னோடொப்பது இல்லாமையால் ‘ஒன்று' என்பது எண்ணலளவை யாகுபெயராய் ஒப்பற்ற ‘கற்பு' எனினும் பொருந்தும்.

பெண்டு - பெண்மை. நன்று:

அறத்தின்மேற்று. நாடூக்கல் பெறவென்றொன்று அவாய் நிலையான் வருவித்துக் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-22, 11:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே