கூத்தொருவன் ஆடலாற் பாடு பெறும் – நான்மணிக்கடிகை 84
இன்னிசை வெண்பா
நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்
பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும்
நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்
1ஆடலாற் பாடு பெறும் 84
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
தண்ணீரின் பாய்ச்சலால் பயிர் விளையும் நிலம் செழிப்படையும்;
கடல் கொடுக்கும் முத்து முதலிய பொருள்களால் நகரம் பெருமை பெறும்;
தங்கீழ்க் கைப்பற்றி அரசாளும் நாட்டினால் அரசர் சிறப்படைவர்;
வல்லானொருவன் ஆடுதலால் நாடகம் மேன்மையடையும்.
கருத்து:
விளைநிலம் நீர்ப்பாய்ச்சலாற் செழிப்படையும்: பட்டினங்கள் கடல்வளத்தாற் பெருமையுறும்; மன்னர் தம் ஆளும் நாட்டினாற் சிறப்படைவர்; கூத்து வல்லானொருவன் ஆடலால் மேம்படும்.
விளக்கவுரை:
பட்டினமென்னுங் குறிப்பானும் பண்டமென்னுங் குறிப்பானும் இரண்டாவது நீர், கடலை யுணர்த்தும்; தலைமையால் உணர்த்திற் றெனினுமாம்; இடத்து நிகழ்பொருளை இடத்தின் மேலேற்றி ‘நீர் வழங்கும்' எனப்பட்டது.
நாட்டானென்பது நாட்டிலுள்ள குடிமக்களின் நன்மையானென்க. ஆடலென்றது நடிப்பு
(பாடம்) 1 பாடலால்