பெண் பிள்ளையே
வெள்ளைப் பனி கோர்த்து
காலை
வாசற்கோலம்
போட்டு வைப்பேன்,
ஒளி
பனியில் பட்டுத்
தெறிக்கும் அழகை
உனைத் தட்டி எழுப்பிக்
காட்டிடவே !
நீ நட்டு வைத்தப்
பூச்செடிகள்
பூத்திருக்கா என
பார்த்திருக்க,
பறித்த பூக்களை எல்லாம்
மீண்டும்
மலரச் சொல்லிக்
கேட்டிருந்தேன் !
ரோஜாச் செடியில், மாறி
மல்லிகைப் பூத்திருக்க,
நீ குலுங்கிச்
சிரித்ததிலே
உன் முகத்தில்
ரோஜா பூத்திருச்சே !
உதிர்ந்த இலைகள்
உலரும் முன்னே
ஊன்றி வைத்துக்
களைத்திடுவேன் !
இலை இசைந்தாடி
தரை வீழாதிருக்க
தரைக்காற்று வீசத்
தடைப் போட்டிருந்தேன் !
மரம் கண்டு ரசித்து, நீ
திரும்பும் வரை !
முப்பது நாளும் முழுமதி
வானில்
முடிச்சுப் போட்டு
முடக்கிடுவேன் !
கட்டில் மேலமர்ந்து
கவித்துவமாய்,
கதைகள் பல
கதைத்திடவே !
மூச்சடக்கக்
கற்றுக் கொண்டேன்
நெஞ்சில் நீ
உறங்கையிலே !
புரண்டு நீ
படுக்கையிலே
அனிச்சையாய்
கையில் அள்ளப்
பழகிக் கொண்டேன் !
பெண் பிள்ளை
பிறந்தால் கூற
இப்படிக்
கவிதை ஒன்றை
எழுதி வைத்தேன் !
என் பிள்ளை
நீதான் என
உனக்கே நான்
படைத்து விட்டேன் !
- நா முரளிதரன்