டெலிபதி

மொழி என்பது,
வாய் வார்த்தைகளின்
உரையாடலா ? இல்லை,
மெய் எண்ணங்களின்
பரிமாறலா ?

வார்த்தைகள் தான்
மொழி என்றால்
மனிதரிடம் மட்டும் பேசலாம் !

வாழ்வியலின் மொழி
புரிந்தால்
மரத்திடம் கூட பேசலாமே !

கண்ட நொடியில்
காதல் மலரக்கூறியது
எந்த மொழி ?
ஏழ்மையைக் கண்டு
இரக்க குணம் வந்தது
எதன் வழி ?
அது மனம் சொன்ன மொழி !

ஏலியனிடம் பேசுவதா
மனித இனத்தின்
விஞ்ஞானம் ?
இங்கிருக்கும்
இயற்கையிடமும்
இதயங்களிடமும்
பேசுவதுதானே
மெய்ஞானம் !

தாய் மொழியில் கூடத்
தன் மனதின் எண்ணங்களை
விவரிக்க முடியாமல்
திக்கித் திகைத்து நின்ற
எத்தனையோ தருணங்கள் !

காரணம் என்ன ?

உலகின், உயிர்களின்
பொது மொழியை
இன்னமும்
நம்மினம் கற்கவில்லை !

விளங்கவில்லையா,
மொழி என்பது பேச்சல்ல
எதிரில் நிற்கும்
எதனுடனும் ஒன்றிப் போகும்
மனதின் வீச்சு !

ஒளியும் ஒலியும்
தேவை இல்லை
டெலிபதி பேசும் மொழி
கற்றுணர்ந்தால் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (16-May-22, 11:03 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 56

மேலே