அன்னை

அன்னையர் தினம்

கருத்தரித்த தினம் முதல்
கற்பனையில் உருவம் தேடி
முத்தமிழில் கவிதை பாடி
முப்பொழுதும் தாய்மை உணர்வாள்...

வலியோடு உன்னை சுமந்தாலும் மகிழ்வோடு உன்னை வரவேற்பாள்...
கண்டிப்போடு உன்னை கடிந்தாலும்
காலமெல்லாம் உன்னை காத்திடுவாள்....
பட்டினியாய் அவள் கிடந்தாலும்
பாலூட்டி அவள் களிப்படைவாள்....

சின்னச் சின்ன அசைவுகளில்
மின்னல் போல் பூரிப்படைவாள்...
வண்ண வண்ண முகம் பார்த்து
வானவில்லாக வட்டமடிப்பாள்....
படபடப்பான உன் பேச்சில்
பட்டாம்பூச்சியாய் சிறகடிப்பாள்....
குறுகுறுப்பான உன் பார்வையில்
குழந்தையாய் பிறப்பெடுப்பாள்....

தன் உதிரத்தை உணவாக்கி
உன் பசியை போக்கிடுவாள்...
தன் வலிகளை உரமாக்கி
உன் ஆசைக்கு உயிர் கொடுப்பாள்...
தன் வியர்வையில் வித்திட்டு
உன்னுள் வீரம் விதைப்பாள்...
தன் மகிழ்ச்சியை மறந்திட்டு
உன் புகழ்ச்சிக்கு துணை நிற்பாள்....

கடவுளின் நிகர் கண்டு
தாய்மையின் மனம் கொண்டு
காலத்திற்கும் உன் தொண்டு
சிறப்படையும் உலகை வென்று.....

மனித தெய்வமான
தாயை வணங்குவோம்...
தாய்மையை போற்றுவோம்.....

சாந்தீஸ்வரி ராஜாங்கம்

எழுதியவர் : சாந்தீஸ்வரி ராஜாங்கம் (17-May-22, 1:50 pm)
Tanglish : annai
பார்வை : 190

மேலே