வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர் – நான்மணிக்கடிகை 97
இன்னிசை வெண்பா
வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்;
சாலும் அவைப்படிற் கல்லாதான் பாடிலன்!
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின் 97
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
ஒள்ளிய நகைகளை யணிந்த அழகிய பெண்மக்களுக்கு முன் அழகில்லாத ஆடவர் பெருமை இலர்;
கல்வி கேள்விகளான் நிறைந்த அவையிற் புகுந்தால் கல்வியறிவில்லாதவன் பெருமையில்லாதவன்
ஆவான்;
கற்றறிவுடையான் ஒருவனும் படியாதவருடன் சேர்ந்தாலும், அறிவிலார்பாற் சேரினும் அறிஞன் பெருமையிலனே ஆவன்.
கருத்து:
அழகிய பெண்டிர்க்கு முன்னர் அழகில்லாத ஆடவர் பெருமை அடைதலில்லை;
கற்றார் அவையிற் கல்லாதான் பெருமை அடைதலில்லை;
கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதல் இல்லை; அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமையடைதல் இல்லை.
விளக்கவுரை:
வாலிழையார் என்னுங் குறிப்பினால் வனப்பிலார் ஆடவராயினார்.