1967இல் காமராஜர் தோற்றார் நேர்மை வீழ்ந்தது நாணயம் கவிழ்ந்தது

நாணயத்தின் எளிமை தலைவர் காமராஜும், காங்கிரஸ் கட்சியும், 1967இல் சட்டசபை தேர்தலில் வென்றிருந்தால் வாய்மை நேர்மை பிழைத்திருக்கும்; அப்போது காங்கிரஸ் கட்சி வென்றிருந்தால் நாணயம் நிலைத்திருக்கும்; மத்திய அரசு நாட்டின் ஒற்றுமைக்காக ஹிந்தியை பரப்ப முடிவு செய்தது; இந்த கொள்கையை அநீதி , அநியாயம், சர்வாதிகார போக்கு, தமிழ் மக்களின் மீது அவர்கள் விருப்பத்திற்கு எதிராக திணிக்கப்படுகிறது என கண்டித்து அப்போதைய பல எதிர் கட்சிகள், மக்களை திசை திருப்பியது; ஆம், நிச்சயமாக நாம் 1967 இல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, நம் தமிழ்நாட்டு மக்களின் வருங்கால வளர்ச்சியை விவேகத்துடன் சிந்திக்காமல், ஹிந்தி திணிப்பு என்பதை ஒரு வன்முறை போராட்டமாக துவக்கிவிட்டோம். தற்போது, அப்போது இருந்த வன்முறை சுபாவம் இல்லை என்றாலும் , போராட்ட உணர்வு சிலரிடம் இன்னமும் துளிர்விட்டுதான் இருக்கிறது.

நம் நாட்டில் வேலை கிடைக்காமல் வடஇந்தியாவில் சென்று ஊழியம் செய்து வாழ்ந்த, வாழும் தமிழ் அன்பர் பலரை கேளுங்கள்; அவர்கள் சொல்வார்கள், “ ஹிந்தி பேச தெரிந்தால் மட்டுமே வடக்கில் சரியான முறையில் வாழ்க்கை நடத்த முடியும்” என்று; ஏன், நானே வேலை தேடி அலைந்தபோது , 1984 ஆம் வருடம் எனக்கு உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் (புண்ணியத்தலம்) என்ற ஊரில்தான் வேலை வாய்ப்பு கிடைத்தது. பின்னர் நான் எட்டு வருடங்கள் வட இந்தியாவில் இருந்துவிட்டு (ஹிந்தி பாஷயை பேச கற்றுக்கொண்டு), பின்னர் அடுத்த 30 ஆண்டுகள் ஹைதராபாத் நகரில் தொழில் புரிந்து ஓய்வு பெற்று தற்போது கோயம்புத்தூரில், அழகு தமிழ் மொழியுடன் இணைந்து, குழைந்து, வாசித்துக்கொண்டு, வசித்து வருகிறேன். இதுவரை இந்த ஊரில் பருத்தி நெய்வதை காணவில்லை. ஆனால் எவ்வளவு மரியாதையுடன் மக்கள் தமிழ் மொழியினை இனிமையுடன் பேசுகிறார்கள் என்பதை கண்டு மிகவும் நெகிழ்ந்து போகிறேன். சென்னை வாசிகள் (நானே சென்னையில் பிறந்து படித்தவன் தான்), எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களுக்கு கற்று தரலாம். நிறைய அறிவும் திறமையும் அவர்களுக்கு இருக்கிறது, ஆனால் ஒன்றே ஒன்றை தவிர. அதுதான் மரியாதை மட்டு மற்றும் மதிப்பு. இந்த ஒரு விஷயத்தில், சென்னை வாசிகள் கோவைக்கு வந்து ஓரிரு மாதம் தங்கி, இங்குள்ள மக்களுடன் பழகினால், ஒருவரிடம் எப்படி பேசுவது, எப்படி தன்மையாக நடந்து கொள்வது, எப்படி தமிழ் மொழியை இனிமையாக பேசுவது என்பதை கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக சென்னை காய்கறி கடைக்காரர்கள், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள்.
இப்போது, மேலே விட்ட இடத்திற்கு வருவோம். நம் நாட்டின் 45% ஜனத்தொகை, ஹிந்தியை தாய் மொழியாக கொண்டுள்ளனர்; அப்படி இருக்கையில் மீதமுள்ள மக்கள், ஏன் ஹிந்தி மொழியை கற்கக்கூடாது? தமிழர் பலர், பிரெஞ்சு ஜெர்மன் ஸ்பானிஷ் மொழிகளை கற்கின்றனர்; பின், ஏன் நம் நாட்டில் அதிகமாக பேசப்படும் ஹிந்தியை கற்கக்கூடாது? தமிழ்நாடு இந்தியாவின் பகுதியாக இருந்தும், ஏன் ஹிந்தியை எதிர்க்கவேண்டும்? ஹிந்தி அறிந்துகொண்டு அழகு தமிழை வடஇந்தியாவில்
பரப்பலாமே; மதுரை மட்டுமின்றி மதுராவிலும் தமிழ் பட்டிமன்றங்கள் நடத்தி, முத்தமிழை வளர்க்கலாமே; அரிசியை மட்டும் இன்றி பஞ்சாபின் கோதுமையையும் சுவைக்கலாமே; நம் நாட்டிலேயே அதிகமாக சர்க்கரை வியாதி வருவது, நம் மாநிலத்தில்தான். இந்த வியாதி இருப்பவர்கள் அதிகமாக கோதுமை உணவை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்களும் கூறுகிறார்கள் தானே?
மொழி மீது பற்று நல்லது, ஆனால் பிறமொழியை வெறுக்கவேண்டுமா? நம் தாய்மொழியை போல மற்றவர்களுக்கும் அவர்களது தாய் மொழியும் சிறந்த மொழிதானே? தமிழ்நாட்டு மக்கள் 'தேசத்தந்தை' எனப்போற்றும் காந்திஜி தமிழரா? இல்லையே; அவரது தாய் மொழி குஜராத்தியாக இருந்தாலும் , அவர் இந்தியாவில் பல மாநிலங்களில் பயணம் செய்தபோது , ஹிந்தியை தானே பேசினார்? அவரது பல கொள்கைகளை பின்பற்றும் நாம் , ஏன், காந்திஜியை போல ஹிந்தி மொழி கற்றுக்கொள்ளக்கூடாது. இந்த மொழியின் மீது உண்மையாகவே விருப்பம் இல்லை என்றால், இம்மொழியை கற்று கொள்ளவேண்டாம். ஆனால் வெறுக்காமல், கண்மூடித்தனமாக எதிர்க்காமல் இருக்கலாமே? ஹிந்தி மொழியை படிக்க, எழுத கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை கூட தேவை இல்லை. ஓரளவுக்கு பேசவும் , பதிலளிக்கவும் கற்றுக்கொண்டால் கூட போதுமே.
நம் மாநிலத்துக்கு உலக அளவில் பெருமை சேர்த்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பிற மொழியினருக்கும் தானே ஜனாதிபதியாக இருந்தார். ராணுவத்திலும் , இந்திய ரயிலில் பணி புரிபவர்களில், ஹிந்தி மொழி பேசுபவர்கள் தான் அதிகம். இவர்களுடன் இணைந்து எவ்வளவு தமிழர்கள் இந்த துறைகளில் பணி புரிகின்றனர். ஹிந்தி மொழி பேச தெரியவில்லை எனில் , எப்படி இவர்கள் மற்றவர்களுடன் ஒன்று கூடி பணியை செய்ய முடியும்? இதர மாநிலத்தில் இருப்பவர்கள், அதிக அளவில் ஹிந்தி மொழி தெரிந்தவர்களாகவோ, அல்லது பேசினால் புரிந்துகொள்பவர்களாகவோ இருக்கிறார்கள். ஏனெனில், இவர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணி செய்ய தயாராக உள்ளவர்கள். அதை போலவே, ஹிந்தி பேசுபவர்கள் தங்கள் மாநிலத்திற்கு வந்தால் , அவர்களுடன் ஓரளவு ஹிந்தியில் பேசி, வியாபாரத்தையும் விருத்தி செய்து, சம்பாதித்துக்கொண்டு , அதனுடன் நட்பையும் சம்பாதிக்கிறார்கள். மேற்குறிப்பிடப்பட்ட பரந்த சிந்தனைகள் இன்றி , இன்றுவரை ஹிந்தி மொழியை, திணிப்பு என்ற ஒரே வார்த்தையை சொல்லிக்கொண்டு , எதிர்த்து வருகிறோம். தமிழ் நாட்டில், குறைந்தது ஐம்பது விழுக்காடு மக்களாவது ஹிந்தி பாடல்களை கேட்பவர்களாகவும், ஹிந்தி திரை படங்களை பார்பவர்களாகவும் இருப்பார்கள். இப்படி எல்லாம் இருக்கும்போது , ஹிந்தி மொழி மீது இப்படி ஒரு தேவியில்லாத வெறுப்பு கொள்ளவேண்டும்?

இப்போது நிலை என்ன? அமைதியான வாழ்வுக்கு எவ்வளவு திண்டாட்டம்? காமராஜ் அன்று அடைந்த தோல்வி, அவரது தனிப்பட்ட தோல்வி அல்ல; தமிழ் மக்கள் தமக்கு தாமே, தம் தலைகளில் வைத்துக் கொண்ட, பெரிய வேட்டு அன்றோ; அவருடன் நீதி, நியாயம், தர்மம், நாணயம், நேர்மை, இவை யாவும் போனது எங்கே? இன்று லஞ்சம், ஊழல், அராஜகம், இவைகள் எல்லாம் பவனி வருகுதே இங்கே?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-May-22, 12:47 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே