ஒருவர் பொறையிருவர் நட்பு – நாலடியார் 223
நேரிசை வெண்பா
இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ; - நிறக்கோங்(கு)
உருவவண் டார்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறையிருவர் நட்பு 223
- நட்பிற் பிழைபொறுத்தல், நாலடியார்
பொருளுரை:
தம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள் செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியானது ஒன்றன்றோ!
நிறமான கோங்க மலரில் அழகிய வண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே! ஒருவரது பொறுமை இருவர் நட்புக்கு இடம்!
கருத்து:
பொறுத்தலால் நட்பு வளர்தலாலும், அஃதொரு பெருந்தன்மை ஆதலாலும் நட்பிற் பிழை பொறுத்தல் வேண்டும்.
விளக்கம்:
நிறம் - பொன்னிறம்; .உருவென்பது, உருவமென ஈறுதிரிந்து வந்தது. ஒருவர் பொறுத்தலால் இருவர்க்கு நலமுண்டாதலின், ஆக்கமானதை மேற்கொள்க வென்றற்கு ‘ஒருவர்பொறை இருவர் நட்பு’ என்றார்.