ஈசனே போற்றி பாகம் 9

கேட்டதை கொடுக்கும் தெய்வம் நீ இல்லை.
நான் போகும் பாதையை, உருவாக்கியவன் நீ இல்லை.
என் ஐயர்வை போக்கும் உறக்கமும் நீ இல்லை.
ஏனோ மனம் உன்னை தாண்டி, நினைப்பதும் இல்லை.

தெய்வம் என்று தொழுதால் நீயோ, சோதித்து எம்மை மகிழ்கிறாய்.
பாதை காட்டும் தலைவன் என்றால், வழி மறைத்து செல்கிறாய்.
உறங்கும் போதும் கவலை தந்து, ஓய்வை தொலைத்து விடுகிறாய்.
இருந்தும் ஏனோ என்தன் மனதை, வசீகரித்து செல்கிறாய்.

உன்னை அறிய வந்த எனக்கு, என்னை அறிய செய்கிறாய்.
பாதை வேண்டி வந்த எனக்கு, உருவாக்க ஞானம் தருகிறாய்.
வழித்துணை வேண்டி நிற்கும் எனக்கு, நம்பிக்கை தந்து செல்கிறாய்.
குருவே எனக்கு தெய்வம் என்று, சத்தியத்தை உணர்த்துகிறாய்.

நான் தேடும் விடைகள் எல்லாம், உன்னை தானே சேருதே.
என்னுள் இருக்கும் உந்தன் ஞானம், நீ கற்பிக்க ஒளிர்ந்ததே.
இலக்கும் அல்ல, வழியும் அல்ல, ஞானம் மட்டும் தெரிந்ததே.
அந்த ஞானம் பெற்று உன்னை சேர, ஈசனே, மனம் தேடுதே.

ஆசை அற்ற ஞானம் பெற்று, உன்னை சேர விழைகிறேன்.
கொடுப்பதற்கு ஏதும் இல்லை, ஞான தானம் கேட்கிறேன்.
கோடி பிறவி எடுத்தும் ஆத்மா ஞானம் கற்கவில்லையே.
ஈசனே, உன் சரணம் பற்றி ஞானம் பெற நான் வருகிறேன்.

எழுதியவர் : Vignesh (19-Jun-22, 6:58 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 9

மேலே