அப்பாவுக்கோர் மடல்

சேர்ந்தே இருக்கும் வழி தேடி
தனித்தனியே
நீயும் நானும் கண்ட கனவு !

கனவாகவே போனது!

ஒன்று தான் புரியவில்லை !
பாசத்தைத் தெளித்த அதே உள்ளம்
கொஞ்ச நாளாய்
கோபம் வெறுப்பைக் கொட்டிய உள்ளம்
கடைசி நாட்கள் என அறிந்தே
மீண்டும்
நெருங்கி வந்ததோ மனதோடு !

எதையும் மறைத்தே வைத்த நீ
இதை மட்டும் எப்படிக் கூறுவாய் ?
முப்பதை முழுங்கிய
இந்த முட்டாளுக்குத் தான்
புரியாமலே போனது !

முப்பதில் முன் பாதி தான்
நான் உன்னோடு இருந்தது,
பக்கம் பக்கமாய் எழுத
உன் பக்கத்தில் இருந்த
நினைவுகள் இல்லா
ஏழை தான் நான் !

தொலைபேசியில்
கூட நம் மனம் சற்று
தொலை தூரத்தில் தானே
பேசியது !

ஏன், விட்டுச் செல்ல
இவ்வளவு வேகம் !!

கனவில் வந்தாவது
காரணம் சொல்லிடு,
நீயும் தகப்பன் தான்
போகப்போகப் புரியும்
என விட்டு விடாதே !

சொந்தமாய் வீடு - அதில்
கொஞ்சமாய் ஓய்வு என
நிறைவேறாமல்
போனதெல்லாம்
பெரிதல்ல
தகப்பன் பிள்ளையாய்
சிறிது காலம் ஒன்றாய்
தங்காமல் போனது தான் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (19-Jun-22, 8:13 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 1855

மேலே