அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்

விடியும் முன் எழுவாள்
விடியலாய் ஒளிர்வாள்
விதியோடு விளையாடி
விதிவிலக்காக வாழ்வாள்
வீரத்தோடு போராடி
தாரகையாக மிளிர்வாள்
சரித்திரத்தின் பக்கங்களில்
சாதனை படைக்கும் சக்தி அவள்....
அவள் அப்படித்தான்...

கடமையே கண்களாக
தடைகளை தகர்ப்பவளாக
உடலில் மென்மையாக
உள்ளத்தில் உறுதியாக
உழைப்பினில் உண்மையாக
உயர்வினில் உறுதுணையாக உலகை வெல்லும் துணிவானவள் அவள்....
அவள் அப்படித்தான்...

ஆறுதலில் தாயாக
அரவணைப்பில் சேயாக
அர்ப்பணிப்பில் மனைவியாக
அனுசரிப்பில் மருமகளாக
பொறுமையின் சிகரமாக
போராடுவதில் போராளியாக
தியாகத்தின் தலைமகள் அவள்....
அவள் அப்படித்தான்....

அவளுக்கென்று நேரமேது அவளுக்கென்று ஆசையேது
அவளுக்கென்று உணர்ச்சியேது
அவளுக்கென்று மகிழ்ச்சியேது
குடும்பமே உலகமாக
கடவுளின் அம்சமாக
கதம்பமாக சிறப்பவள் அவள்....
அவள் அப்படித்தான்....

நிலையில்லாத வாழ்க்கையில்
விலையில்லா சொத்து அவள்
தள்ளாடும் வயதினிலும் உள்ளத்தோடு உதவுபவள்
ஏற்றங்களை பகிர்ந்தளித்து ஏணியாக துணைநிற்பவள்
ஏமாற்றத்தை கடந்துவிட்டு
எடுத்துக்காட்டாக வாழ்பவள் அவள்....
அவள் அப்படித்தான்....

எத்தனை சுகங்களை இழந்தாலும்
எத்தனை சுமைகளை அடைந்தாலும்
அத்தனையும் புரிந்தவளாய்
அனைவருக்கும் பிடித்தவளாய்
ஆயுளுக்கும் அன்பை மட்டும்
அள்ளி தரும் தெய்வம் அவள்....
அவள் அப்படித்தான்....

எதையும் தாங்கும் உள்ளத்தோடு
எமனையும் எதிர்க்கும் உறுதியோடு
சவாலை ஏற்கும் சக்தியோடு
சரித்திரம் படைக்கும் சாதனையோடு
உலகத்தை உயர்த்தும் வலிமையோடு
உயர்வாய் என்றும் பெண்மையோடு....

- சாந்தீஸ்வரி ராஜாங்கம்

எழுதியவர் : சாந்தீஸ்வரி ராஜாங்கம் (28-Jun-22, 1:57 pm)
Tanglish : aval abbadiththan
பார்வை : 674

மேலே