பிரியாணி

காலை பதினோரு மணி இருக்கும். ஒரு வேலை விஷயமாக வெளியூர் செல்லப் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், ஒரே தாகம். எதாவது கூல்ட்ரிங்ஸ் குடிக்கலாம் என்று நினைத்துப் பார்க்கும்போதுதான் எனது நிலைமை ஞாபகம் வந்தது. மாதம் பன்னிரண்டாயிரத்து ஐநூறு சம்பளம், வீட்டு வாடகை, கரண்ட் பில், தண்ணீர், பிள்ளைகளுக்குக்குப் படிப்பு செலவு என எப்படியும் பத்தாயிரத்தைத் தொட்டுவிடும். மருத்துவ செலவு தனி. இந்த நிலைமைதான் என்னை ஐம்பது வயதுக்கு மேலேயும் இப்படிக்கு கஷ்டப்பட்டு வேலை செய்ய வைத்தது.

மாதக்கடைசி வேறு. கையில் ஒரு காசு இல்லை, வெளியூர் செல்லக் காசுக்கு என்ன செய்வதென்று யோசிக்கும்போதுதான், ஒருநாள் நூறு ரூபாயை என் பேண்ட் பாக்கெட்டில் வைத்தது ஞாபகம் வந்தது. போய்ப்பார்த்தால், என் மனைவி அதைத் துவைத்துக் காயப்போட்டிருந்தாள். நல்ல வேளையாய் அவள் அதை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் எப்படியும் செலவாகி இருக்கும்.

கூல்ட்ரிங்ஸ் பத்து ரூபாய்தான். வெளியூர் சென்றுவர நாற்பது ரூபாய்க்குள்தான் ஆகும். கூல்ட்ரிங்ஸ் குடித்தே ஆகவேண்டும் என்று எழுந்தேன். அதற்குள் பஸ் வந்து நின்றது. நேரே என் கால்கள் பஸ்ஸை நோக்கித்தான் நடந்தது. படியில் கால்வைத்து ஏறப்போகும்போது, ஒரு சிறுவன் என்னைத் தள்ளிவிட்டு முண்டியடித்துக் கொண்டு சென்றான். எனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்துவிடலாமென்று தோன்றியது. கோபத்தை அடக்கிக்கொண்டு பஸ்ஸில் ஏறினேன்.

ஒரு சீட் கூட காலியாக இல்லை. சுற்றிப் பார்த்தேன், கடைசி சீட்டில் ஐந்து பேர்தான் இருந்தனர். ஆறாவதாக நான் போய் அமர்ந்தேன். எப்படியோ உட்கார இடம் கிடைத்தது என்று சந்தோஷமாக இருந்தது. என்னைத்தள்ளிவிட்டு முன்னாள் ஏறிய அந்தச் சிறுவன் உட்காரவில்லை. எனக்கு ஒரே சந்தோஷம். சற்று நேரம் போனவுடன்தான் தெரிந்தது, அவன் பஸ்ஸில் ஏறியது வெளியூர் செல்ல அல்ல என்று. ஒவ்வொரு சீட்டாகச் சென்று, "அம்மா! ஐயா! அனாதையா! வயிறு பசிக்குதுய்யா! ஏதாச்சும் போடுங்கய்யா!" என்றான்.

அவனைப் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரத்திற்குமுன்தான் பார்த்தேன். அவனும், அவன் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். இருவர் துணிகளும் ஒரே அழுக்கு. எப்படியும் குளித்துப் பல நாட்கள் இருக்கும். கையில் ஒரு அழுக்குமூட்டை. இருவருக்கும் எந்த உடல் ஊனமும் இல்லை. எனக்குப் பயங்கரக் கோபமாக வந்தது. இப்படிப் புளுகுகிறானே! பிழைப்பதற்கு வழியா இல்லை? எந்தக்குறையும் இல்லை. இவன் அம்மா, இவனது வாழ்க்கையும் கெடுக்கிறாளே!

அவர்களுக்கு என்ன நிலைமையோ? எனினும் இந்த வாழ்க்கை நன்றாகவா இருக்கிறது? பெற்ற தாய் இருக்கும்போதே அநாதை என்கிறானே! இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவன் கடைசி சீட்டுக்கு வந்துவிட்டான். திரும்பவும் அதே வசனங்கள். நான் கோபத்தை அடக்கிக்கொண்டு, "சில்லறை இல்லை" என்றேன். என் அருகில் ஒருவர் ஒரு ரூபாயை அவன் தட்டில் போட்டார். லேசாக அவன் தட்டை எட்டிப்பார்த்தேன். ஏழெட்டு நாணயங்கள் கிடந்தன. உடனே அவன் பஸ்ஸைவிட்டு இறங்கி வேகமாய் நேரே ஒரு டீக்கடைக்குச் சென்று நான்கு போண்டா வாங்கி வந்து ஆளுக்கு ரெண்டாக வாயில் போட்டார்கள். ச்சீ! இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று எனக்குள் தோன்றியது. பஸ்ஸும் புறப்பட்டது.

ஒரு வழியாக வெளியூரில் வேலையை முடித்துவிட்டுத் திரும்புகையில் ஏதாவது சாப்பிடலாம் என்று யோசிக்கும்போதுதான் எங்கள் ஊர் பிரியாணிக்கடை ஞாபகம் வந்தது. ஐம்பது ரூபாய்க்கு நல்ல ருசியாக இருக்கும். அங்கே போய்விடலாம் என்று முடிவெடுத்து மணியைப் பார்த்தால் மதியம் மூன்று ஆனது. ஊர் போய்ச்சேர எப்படியும் மணி நான்கு ஆகிவிடும். அதுவரை பசியைப் பொறுக்க ஒரு கூல்ட்ரிங்ஸ் குடித்தேன். பரவாயில்லை, இங்கும் பத்து ரூபாய்தான். பஸ்ஸும் வந்தது. ஏறி உட்கார்ந்தேன். டிக்கெட் பத்தொன்பது ரூபாய். வரும்போதும் அதே காசுதான். இருபது ரூபாய் குடுத்து மறக்காமல் ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டேன்.

இப்போது முன்னால் சீட் கிடைத்தது. என் பக்கத்தில் ஒருவர் செய்தித்தாளைப் பார்த்தபடியே சிரித்துக்கொண்டிருந்தார். நான் அப்படியென்ன செய்தியாக இருக்கும் என்று ஆர்வத்தோடு, "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றேன். "இந்த சீட்டுக் கம்பெனிக்காரங்களை நெனைச்சுத்தான், இந்த மக்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள், நேற்று ஒருத்தன் கோடிக்கணக்கான பணத்தை ஏமாத்திட்டு வெளிநாட்டுக்கு ஓடிட்டானாம்" என்றார். எனக்குச் சுரீர் என்றது. உலகில் யாருமே ஏமாற்றவில்லையா? அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது, மக்கள் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள், பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றுகிறார்கள், பெற்றோர்கள்களும் சில நேரம் பிள்ளைகளை ஏமாற்றுகிறார்கள். திரும்பும் திசை எல்லாம் ஏமாற்றி பிழைக்கும் மனிதர்களே அதிகம் இருக்கிறார்கள் கோடிக்கணக்கான பணத்தை மனசாட்சியே இல்லாமல் ஏமாற்றுகிறார்கள்.

அந்தச் சிறுவனும், அவன் அம்மாவும் எதற்காக ஏமாற்றினார்கள்? எதைப் பிரித்தார்கள்? பத்துப் பேரிடம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய். அதை வைத்து அவர்கள் டீ குடிக்கக்கூட முடியாதே! பஸ் ஊர் வந்து சேர்ந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கும்போது அதே சிறுவன் மீண்டும் என்னைத் தள்ளிவிட்டு நான் வந்த பஸ்ஸிலேயே ஏறினான். இந்த முறை நான் அவனை விடவில்லை. அவனை என்னோடு பஸ்ஸை விட்டு வெளியே இழுத்தேன். அவன் கோபத்தோடு வந்தான். என் பாக்கெட்டில் இருந்து பஸ்ஸில் மீதி வாங்கிய இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்தேன். இந்த இரண்டு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? மீண்டும் பாக்கெட்டில் கைவிட்டேன். பிரியாணி சாப்பிட வைத்த ஐம்பது ரூபாய்தான் இருந்தது. வீட்டிற்கு கால் மணி நேரத்தில் போய்விடலாம். மதியம் சமைத்து எப்படியும் மீதம் இருக்கும். அனால் அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் என்ன இருக்கும்?

ஐம்பது ரூபாயை அவன் தட்டில் போட்டேன். அதற்காக ஒரு சிறிய "நன்றி" என்ற வார்த்தையாவது கிடைக்கும் என்று நினைத்து ஏமாந்து போனேன். அவன் திரும்பவும் பஸ்ஸில் ஏறவில்லை. நேராக அவன் அம்மாவிடம் ஓடினான். இருவரும் ஒரு ஹோட்டல் வாசலில் போய் நின்றார்கள். புரோட்டா, தோசைதான் இருந்தது. புரோட்டா பத்து ரூபாய். தோசை இருப்பது ரூபாய். "சாப்பாடு இருக்கா?" என்று கேட்டனர். "சோறும் குழம்பும்தான் இருக்கு, கூட்டு பொரியல் எல்லாம் முடிஞ்சு போச்சு" என்றார் ஹோட்டல்காரர். " கொஞ்சம் சோறு நிறையாக கட்டித்தாங்க" என்று ஐம்பது ரூபாயைக் கொடுத்தனர். திரும்ப முப்பது ரூபாய் ஹோட்டல்காரர் கொடுத்தார்.

நேரம் நான்கு மணியைத் தாண்டி இருந்தது. நல்ல பசி. வீட்டிற்குப் போனவுடன் மனைவியிடம் சோறு போடு என்றுதான் சொன்னேன். அவள் தட்டில் கொண்டுவந்து வைத்ததைப் பார்த்ததும் எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. பக்கத்துக்கு வீட்டிற்கு யாரோ விருந்தினர் வந்ததற்கு பிரியாணி செய்தார்களாம். மீதம் இருந்ததை என் மனைவிக்குக் கொடுத்தார்களாம். என் வயிறு நிறைந்தது. என் மனசும்தான்...

எழுதியவர் : மனுநீதி (1-Jul-22, 6:47 pm)
சேர்த்தது : மனுநீதி
Tanglish : biriyaani
பார்வை : 160

மேலே