வலியோடு வாழ்ந்துதான் பார்
உயிர்வலி உணர் ;
ஒருநிலை மனம் பிறழ் ;
பிடித்தவை வெறு ;
அன்பைத் தடு ;
குளிக்கையில் அழு ;
கடவுளை மற ;
ஆறுதல் ஏற்காதே ;
கிடைத்ததை உடை ;
தினத்தொழில் உதறு ;
சிரிக்கத் தயங்கு ;
சுற்றம் விலகு ;
ரணம் அனுபவி ;
கண்ணீர் சிந்து ;
நீலிக்கண்ணீர் அல்ல...
வலியோடு இவ்வரிகள் எழுதும்
எம் எழுதுகோளின்
நீலக்கண்ணீர் போல !
அழுதல் கோழமையா என்ன?
எழுதலின் ஏணிப்படி !
அடக்க நினைக்கும் உணர்ச்சிகள்
வெடிக்கக் கடவது என்றேனும் !
எனவே கண்ணீர் சிந்து !
உணர்ந்தாகிய பின்,
உயிராய் நினை ;
ஒருநிலை பிறழாதே ;
வெறுப்பைக் கைவிடு ;
அன்பிற்கு அழைப்புவிடு ;
குளிக்கையில் பாடு ;
ஆறுதல் அடை ;
கெஞ்சப் பழகு ;
உடைந்தன ஒன்றுசேர் ;
வாய்விட்டு சிரி ;
நேரம் ஒதுக்கு ;
மனதால் பேசு ;
உயர்வென உணர்த்து ;
அன்பில் சுதந்திரம் கொடுக்க
நீயோ வள்ளலும் அல்ல !
யாரும் அடிமையும் அல்ல !
எனவே,
விரைவில் வரவேண்டி
விடை கொடு ;
விலகி நில் ;
சிந்திக்க விடு ;
அதுவரை,
நினைவைப் பெருக்கு ;
கடலாய் மாற்று -
கணமொருமுறை கால்நனை ;
காற்றை வருடு ;
கற்களில் கலை ரசி ;
தீயின் இதம் தீண்டு ;
அண்ணாந்து சொக்கிப்போ !
இருள் அழிக்கும் ஞாயிறு, அதே
இருளுக்குள் அழிவதே நியதி !
கரைதொட முயலும் அலைகள், வெறும்
நுரைமிஞ்ச கடல்கொள்தலே இயற்கை !
ஒளிக்கதிர் மாய்வதில்லை !
அலைகள் ஓய்வதில்லை !
எனவே,
காத்திருந்து காதல் தேடு ;
காயத்திலும் காதல் தேடு !
வலியோடு வாழ்ந்துதான் பார் !