இரண்டாம் முறை ம்ம்
இரண்டாம் முறை ம்ம்
========================°°
//""சாலமனின் சாங் ஒஃப் சாங்கில்
சொல்லியதுபோல..
இது இரண்டாம் முறை ம்ம்....
நீ உன் அதரஙகளால் என்னைத் தழுவி முத்தமிடு,
நான் விழுங்கிக் கொண்டிருக்கும்
உன் ப்ரேமை
ரசகரமாயிருக்கிறது
நீ தெளித்தத் தைலம்
வாசனை மிகுதியாய் இருக்கிறது,
உன் நாமாவளி,
நீ பகிர்ந்த தைலம்போல்
என்னைச் சுற்றி எங்கும்
ப்ரவாகமாய் ப்ரவேசிக்கிறது
ஆதலால்தானோ என்னவோ
கன்னிகைமார்கள்
உன்னை இத்தனை நேசிக்கிறார்கள்போல்,
உன்னிடமுள்ள காந்தம்
என்னை
உன்பின்னால் சுண்டி இழுக்கிறது,
மீண்டும் நாம் ஒடிப்போலாம் வா ம்ம்//""
போர்வை உடுத்தி
உன்முன்னால் நிற்கிறேன்,
கூட்டத்தினிடையே
உன் கள்ளப்பார்வைகள்
கையசைக்கின்றன,
உன்னை நெருங்கி வருவதைப் பார்த்து,
உன் சோட்டு ஆண்கள்
இசை வாத்தியங்களால்
நம் கல்யாண முழக்கம் முழங்கினார்கள்,
ஒரு மழை பொழிந்ததன் பொருட்டு
காலம்
இதுதான் நம் காதலென
சத்தியம் செய்துப் போயிற்று..
திருவிழா முடிந்து
கடைசி வண்டிக்கு கிளம்பியிருந்தோம்
எல்லோரும்
நல்லா உறங்கியிருந்தார்கள்
இதுபோல ஒரு
பெருனிலாக் குளிர்ச்சியில்
நீ உன்னோட மவுத் ஆர்கன் எடுத்து
அதுவரை கேட்காத
ஒரு நடை வாசித்திருந்தாய்,
அப்போது
என் முனங்கல்களின்
ஆவேசத்தில்
உறங்கிக் கொண்டிருந்த எல்லோரும்
எழத்துவங்கி
நாம் இருவரையும்
ரசிக்கத் துவங்கியிருந்தார்கள்,
அவ்வெண்பிறையின் கறைநடுவில்
தேவதைகள் சிலர்
ஆகாசத்திலிருந்து
பூப்பொழிவதுபோல ஒருக் காட்சி
மின்னி மறைந்தது
இத்தனையும் காலத்தினிடையில்
அதுப்போல ஒரு நடை
அங்கு யாரும் வாசிக்கவேயில்லை
என்பதைப்போல்
உன் ராவண அணைப்பின் காம்பீரியத்திற்குள்
அன்று சிறை சென்றிருந்தேன்
இதுவே முழுமையென
முறிந்த இடந்தொட்டு
நாம் வாழ்ந்திருக்கலாம்தான்
வாழ்க்கையில்
எதெல்லாமோ நம்மைப்போல
இடை முறிந்து போயிருக்கலாம்தான்
கண்டவர்கள் இன்னும்
அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம்தான்,
இக் காதலை
ஆலாபனை செய்யாத ..
ஒருமுறையேனும் நேசிக்காத
ஏரிக் கரைகளோ
முற்றத்து வாசல்களோ அங்கு இல்லை,
நீ கொடுத்த
அமூல்ய வஸ்து ஒன்றினை
என் திண்ணைப் பரணின்மேல்தான் வைத்திருந்தேன்
அதைத் தொட்டிளகாத
பறவையின் கரங்களே அங்கு இல்லை ..
ஒரு வைகல் நேரக் காயல் கரையில்,
அன்றில் பறவை முட்டையிட்டது
வட்டக் காலிலா
வள்ளப் படுகையிலா என
நினைவில்லாதே
இரு வயிற்றுப் புள்ளைத் தாச்சிகள்
அண்ணாந்து
அந்தம் நோக்கியிருந்தார்கள்,
ஒட்டும் தாமதிக்காதே
காயலோடு சாய்ந்திருந்த
செவ்விளனி மரத்திலிருந்து
ஒரு செவ்விளனி தானுருவி
அதோ ஓடைவிழுந்து நேர்மிதந்து போனது.
அதே, ஒரு வைகல் நேரத்தில்தான்
அர்ச்சகர்கள்
பூஜை முடித்து
கோபுரக் கதவுகளிலிருந்து
ஒவ்வொருக் கதவாய்
"அரைசாற்றி" அடைப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
குமாரன் ஆசானும் குட்டிதேவதைகளும்
விளையாடிமுடிந்த அயர்ச்சியில் ஓய்ந்திருந்தார்கள்,
அடுத்தநாள்
பேருந்துமேடையில்
உனக்கென சொல்லஎழுதிய
காதல் கடுலாசியில்
எங்கிருந்தோ பறந்துவந்த
சாம்பல் துளியொன்றின் மசிப்படர்ந்து
எண்ணம் அழிந்திருந்தது ம்
அனுசரன்