பால்ய கால நண்பனே
கதையையும்
கவிதையின் நடையையும்
சொல்லி
எனக்கு தமிழ் தந்தது நீ !
முதலும் கடைசியுமாய்
வண்ணம் பூசி
நடுவில் நிறைய
கருப்பைப்பூசிய
எம் வாழ்வின் பக்கங்களை
உணர்த்தியது
உன் பக்கங்கள் !
இமாலய வெற்றி
இந்தியா பெற்றதென,
நீ சொல்லிக்
கேட்கக் காத்திருந்த
இன்ப இரவுகள் தந்ததும் நீ !
எத்தனை மகான்கள்
சொல்லியும் ஏறாத
தத்துவம் பல,
உலகோடு சேர்ந்தும்
பெறாத அனுபவம் பல
திருப்பும் பக்கங்களில்
தெளிவாய்
சொன்னது நீ !
வல்லரசின் வலிமையையும்
எத்தியோப்பியா ஏழ்மையையும்
உலகப் பக்கத்தின்
அடுத்தடுத்த
பத்தியில் காட்டி
உலகின் பல முரண்கள்
சொன்னதும் நீ !
வரலாற்றைத் தாங்கி
வரும் காலத்திற்கு ஏங்கி
வக்கனையாய் சேதி தந்தாய்,
துவண்டு போகும்
சேதியின்
சோகம் தாங்கினாய்,
வெகுண்டு எழும்
செயல்களில்
வீரம் பாய்ச்சினாய் !
உன்னைப் புரட்டிய
சில நிமிடங்களில்
நீ கடத்தியது
இப்படி
எத்தனை உணர்ச்சிகள் !
நீ பிறப்பது தினமும்
ஆனால்
வாழ்வது என்றென்றும் !
இணைய வளர்ச்சியின்
தாக்கம் இருந்தும்
இன்றும் வாழ்கிறாய்
தேநீர்க் கடையிலும்
பார்பர் ஷாப்பிலும் !
ஆனால் என்ன,
இப்போதெல்லாம்
உன் முகத்திரையை
விலக்கித் தான்
பார்க்க வேண்டி இருக்கிறது
உன் முதற்பக்கச்
செய்தியை !
பால்ய சிநேகிதா !
உன்னை மறக்கவில்லை
பஜ்ஜிக்கடியில்
பார்த்தாலும்
படித்து விட்டு தான்
எறிகிறேன்
பார்த்தாயா என் நட்பை !
- நா முரளிதரன்