சுதந்திரம் பெற்று எழுபத்திஐந்து வருடங்கள் நிறைவு

சுதந்திரம் மூன்று வகை மந்திரம்
கருப்பை விட்டு வரும் சுதந்திரம்
எண்ணங்களை பகிரும் சுதந்திரம்
நாமே ஆளும் நம்நாட்டு சுதந்திரம்

பெண் என்றால் கருவிலே அழித்து
சமுதாய சீர்கேடு செய்யவா சுதந்திரம்?
பெண் என்றால் 'நீ வீட்டிலேயே இரு'
எனும் ஆணின் ஆணவமா சுதந்திரம்?
பெண்ணை திருமணம் கொள்ள பணம்
கொண்டு நகைகள் பெறுவதா சுதந்திரம்?
ஒரு கேளிக்கை பொருளாய் பெண்ணை
அவமானப்படுத்துவது தானாசுதந்திரம்?
இளம்பெண் இரவில் வெளியே செல்வது
அபாயம் எனும் அவலநிலையா சுதந்திரம்?
திரையிலும் மறைவிலும் உடைகளை
குறைப்பதுதானா பெண்களின் கவுரவம்?
வறுமையாலும் சூழ்நிலையாலும் பெண்
தன்னை விற்று பிழைப்பது சுதந்திரமா?
பணம் கொண்ட பெண்களுக்கு மானம்
குணம் உள்ள பெண்களுக்கு அவமானம்
பெண்களை இப்படி கணிப்பதா சுதந்திரம்?

உள்ளத்தின் தூய்மையான எண்ணங்களை
வெளியே பகிராமல் மூடிவைப்பதா சுதந்திரம்?
சுதந்திரமாக ஒருவர் கருத்தை தெரிவித்தால்
அவரை வன்முறையாக வெட்டுவதா சுதந்திரம்?
கேளிக்கை என்ற பெயரில் பிறர் வழிபாட்டை
இழிவுபடுத்துவது, பெண் பெற்ற சுதந்திரமா?
பெண்களே பெண்களை அநாகரீகம் செய்வது
பெண்குலத்திற்கு கொடுத்த சிறப்பு சுதந்திரமா?

சினிமா, சமூக தளங்கள் மூலமாக கேவலமான
ஆபாச காட்சிகளை சித்தரிப்பதா சுதந்திரம்?
பொதுமக்கள் இட்ட பிச்சைதான் அரசு ஊழியம்
ஊழியத்தில் ஊழல் செய்து பணத்தை சுரண்டி
லஞ்சம் வாங்கி அயோக்கிய பிச்சைக்காரனாக
மனசாட்சியின்றி மிருகமாய் திரிவது சுதந்திரமா?
காடுகளை போலவே ஆடுகளையும் மாடுகளையும்
வெட்டி, சுற்றுப்புறசூழலையை கெடுப்பதா சுதந்திரம்?
கல்வி கற்று அதன்படி நிற்காமல் ஒழுக்கநிலை வழுவி
பணம் ஒன்றே குறிக்கோள், இதுதான் கல்வி சுதந்திரமா?

பல நல்ல செய்திகள் தினமும் வெள்ளம்போல் இருந்தும்
கொலை கொள்ளை கற்பழிப்பு, சினிமா சில்லறை அரசியல்
செய்திக்கு முக்கியத்துவம் தருவதா பத்திரிகை சுதந்திரம்?
கலை, சேவை மூலம் பணம் புகழ் பெற்று, பண்பினை விட்டு
சமூக தளங்களில் மற்றவரை சாடுவதுதானா சுதந்திரம்?

சிறுவர்கள் நாளைய இந்தியாவை ஆள்கின்ற தலைவர்கள்
இவர்களை தருமம் சமூக நீதி வழியில் வாழ கற்பிக்காமல்
இவர்கள் அலைபேசி, தொலைபேசியுடன் கூடிக்குலாவவா
குழந்தைகளை சான்றோராக்க நாம் பெற்ற வீர சுதந்திரம்?

வேர்வை சிந்தி, ரத்தம் கொட்டினோம், சத்தம் செய்தோம்
பல நூற்றாண்டுகள் அடிமைகளாய் ஈனமாக நசுக்கப்பட்டு
மானம் மரியாதை மற்றும் கலாச்சாரம் நெறிகளை இழந்து
பின்னர் காந்திஜி, நேதாஜி, லால்பகதூர் சாஸ்த்ரிஜி, இன்னும்
சந்திரசேகர் ஆசாத்ஜி, ஜான்சி ராணிஜி, திலகர்ஜி, சிவாஜி
ராணி வேலு நாச்சியார், உலக கவி பாரதி, வஉசி, கோகலே
இதைப்போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தில்
குடும்ப பெண்கள் பலர் தம் வாழ்க்கையை அர்பணித்ததில்
அறியப்படாத சாதாரண பல எளியமனிதரின் செயல்களால்
எழுபத்திஐந்து வருடங்களுக்கு முன் சுதந்திரம் பெற்றோம்!

கடந்த எழுபத்தியைந்து வருட காலத்தில் நம் சாதனை என்ன?
மாநிலங்களின் எண்ணிக்கை, ஜனத்தொகையில் முன்னேற்றம்
இன்றைய சமுதாயத்தின் சீர்கேடான போக்குகள் முன்னேற்றம்
இதைத்தவிர நாம் கண்டா பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம்
உலகநாடுகள் நம்மை மதித்து நடத்தும் பெருமை முன்னேற்றம்
பெண்கள் நாட்டிற்கு செய்யும் சேவைகளில் நல்ல முன்னேற்றம்
உலகநாடுகள் ஆன்மீகத்தில் நம்மை அணுகுவதில் முன்னேற்றம்
ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் இவற்றில் நாடு கண்ட முன்னேற்றம்
இங்கு பிறந்து வெளிநாடுகளில் சேவை செய்வதில் முன்னேற்றம்

இவை அனைத்தும் நாம் சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்கு பின்
செய்துள்ள மெச்சப்படவேண்டிய உயர்ந்த சாதனைகள் என்றாலும்
சுதந்திரத்தின் உண்மையான பலனையும் அதனால் உயர்வினையும்
இந்திய மக்கள் பெற்றோமா என்பது கேலிக்கூத்தாக இல்லாவிடினும்
மனசாட்சி கொண்டு நோக்கும்போது கேள்விக்குறியாக இருக்கிறது!
ஒரு தனி நாடாக சுதந்திரம் அடைந்து விட்டோம், தனி மனிதர்களாக
ஒவ்வொருவரும் உண்மையான சுதந்திரம் என்ன என்று அறிந்தோமா?

நாளை மறுநாள் மூவர்ணக்கொடி ஏற்றி மகிழ்ந்து சுதந்திர கோஷங்களை ஆர்பரிக்கவிருக்கும் அனைத்து தேசப்பற்று கொண்ட இந்தியருக்கும் வரலாறு சிறப்பு மிக்க சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

வந்தே மாதரம்

ஜெய் ஹிந்த்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Aug-22, 8:06 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 91

மேலே