ஓயாத அலைகள்
ஓயாத அலைகள்
==============
நீயாக உன்னை நினைப்பதை விட்டு 
நித்தமும் வாழ்வின் நிசந்தனைக் காண்பாய் 
தீயாகச் சுட்டுச் தீய்ப்பவர் முன்னே 
தேனாகப் பாயும் திருநதி கேட்பாய் 
காயாக நின்று கனியான மாற்றம்
காண்கிறப் பூவின் காம்புக ளாவாய்
நோயாக வந்து நுழைபவர் விட்டு 
நூதன மாகவே நோக்கிடச் செய்வாய் 
*
ஆயாத வற்றை ஆய்வுரை செய்தே 
அகிலம் முழுவதும் அறிந்திட வைப்பாய் 
ஈயாத நெஞ்சில் இரக்கம் கசிய
ஏதேனும் செய்தே ஈர்த்திடச் செய்வாய்
தாயாக உனையும் தாங்குதற் கெனவே 
தாரணி எங்கிலும் தமிழ்வளர்ப் பாயே 
மாயாத பொழுதின் மனமெடுப் பாயே 
மலையெனுந்  துன்பம் மடுவாக்  குவாயே 
*
தேயாத நிலவின் திருவொளி யாயே 
  தீராத இருளைத் தீர்த்திடு வாயே
வாயார உன்னை வாழ்த்திடும் வண்ணம் 
 வறுமையை விரட்ட வழிவகுப் பாயே 
பாயாத நதிகள் பாய்வது போன்று 
பலதிசை உன்னைப் பரப்பிடு வாயே  
ஓயாத அலைபோல் உனக்குள் இருக்கும்
உயர்கொள் கையாலே உயர்ந்திடு நீயே  
* 
மெய்யன் நடராஜ்

