வயிறே வயிறே
கரும்புச் சாற்றைக் கசியும் கரும்பு
விரும்பும் வெல்லமாய் வடிவம் பெறவே
கரும்புச் சாற்றைப் கசிந்த பின்பு
எரிந்து அனலை எழிலாய் கொடுக்கும்.
நீரைப் பொழியும் நீர்நிறை மேகம்
நீரென மாறியே நீண்ட புவியை
ஆரத் தழுவியே ஆவியாய் ஊற்றாய்
பாரில் உயிரின் உயிராய் கழிவாய்
வயிறே வயிறே வளந்தரும் வயிறே
உயிரை வளர்க்கும் உன்னதப் பணியை
உயர்வாய் செய்து உதிரஞ் சுரந்து
உயிரும் நிறைவரை நிரம்புதல் உண்டோ
நோயாய் நுழைந்து நோவைத் தந்து
தீயால் உருகிய திரவியம் போன்று
ஆயா சநிலையில் அனுதினம் உடலை
பேயாய் மாற்றிய நோயும் மாளுதே
கல்லின் மண்ணின் கலவையாம் பூமி
வெல்லும் வகையில் விளைந்தவன் மனிதன்
பொல்லப் பணத்தால் பிளக்கிறான் புவியை
சொல்லொனா நிலையில் அழிவான் இறுதியில்.
--- நன்னாடன்