உறைந்த காந்தம்

இரவை பருகியபடி
வேங்கையின் பசியோடு
காத்திருக்கிறேன்...

நாட்களை உதிர்க்கும்
வனத்திலிருந்து  நான்
வெளியேறும் நாள் பார்த்து.

என் வாளின் ஒளிபட்டு
கண் சுருங்கும் வானம்.

என் நிலத்தின் மௌனம்
தீக்குளிக்கும் காட்சிகள்
நீ அறியாதது.

என் ஒவ்வொரு
தப்படியிலும்
அதிரும் உன் மரணம்.

நீ நிதமும் மிதித்து கொன்ற
பூக்கள் எழுதிய உயிலொன்றில்
நான்...

ஓசைக்குள் வீறிடும்
மனதின் அந்தகாரம்.

காலத்தின் விந்து
களிப்பின் கனல்
பூக்கள் தேக்கிய காற்று.
எரிமலையின் நாக்கு.
என் தாகத்துக்கு
உன் மரணமே மருந்து.

நெருப்பை சிந்தும்
நீல நயனங்களோடு
நிலவை எரிக்கும்
உன்மத்த சிறகுடன்

உனக்குரிய ஆகாயத்தில்
கொக்கரித்து காத்திருக்கிறது
நான் உனக்கெழுதும் தீர்ப்பு.

எழுதியவர் : ஸ்பரிசன் (21-Aug-22, 3:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : urantha gaantham
பார்வை : 1319

மேலே