கொங்குநாடு என்ற இனிய கோயம்புத்தூர்
கோவை என்று அரசனின் பொருள் கொண்டு தமிழை ஆள்வது இந்த ஊர்
இங்கு நான் குடிபுகுந்து ஆறுமாதங்களே ஆயினும் நீண்ட கால நினைவு
இங்கு நான் கண்ட கீரை வகைகளை இந்தியாவில் எங்கும் கண்டிலேன்
சிறுகீரை தொடங்கி அகத்தி வரை, வல்லாரை தொடங்கி மணத்தக்காளி
ஒவ்வொரு கீரையும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற அருமை கீரை
இந்த அரிய காரணத்தினால் கோயபுத்தூரின் இன்னொரு பெயர் கீரையூர்
இங்கு காணும் வாழைப்பழ வகைகளையும் நான் எங்கும் கண்டதில்லை
பூவன், மலை, செவ்வாழை, தேன் கதலி, ரஸ்தாளி, என்று பலவகைகள்
வாழை பழங்கள் குவிந்த இவ்வூரின் இன்னொரு புதுப்பெயர் வாழையூர்
வாழை தண்டு எனில் இங்குள்ள வாழைத்தண்டைதான் கூறவேண்டும்
மிகவும் இலேசாகவும் சுவையுள்ளதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது
எனவே இந்த ஊரை "தண்டூர்" என்று ஏன் அன்புடன் அழைக்கக்கூடாது?
முருங்கை காய் , அடாடா எவ்வளவு இளசு எவ்வளவு பெரிய முருங்கை
குழம்பு , சாம்பார் , கூட்டு என்று பலவகைகள் சுவையாக சமைக்கலாம்
இக்காரணத்தால் பணிவு கொண்ட இவ்வூரை முருங்கையூர் எனலாமே
மருதாணி இலை என்றால் மயங்காத பெண்களை தான் காணமுடியுமா?
எந்த வீட்டிலும் எந்த இடத்திலும் அப்படி வளர்கின்ற மருதாணி செடிகள்
அப்படி என்றால் இந்த ஊரை மருதாணியூர் என்பதில் ஒரு தவறுண்டோ
மயிலாடுதுறையில் நான் ஒரு மயிலை கூட கண்ணால்கண்டதில்லை
இங்கோ பல அழகிய மயில்கள், பல இடங்களிலும் தோகை விரிக்கிறது
பல மயில்களை கண்டு ரசிப்பதால் இந்த சிறப்பான ஊர் மயிலூர் தானே?
குதிரைகள் கிண்டியில் மிகவும் குறைவு , இங்கே எவ்வளவு தெரியுமா?
நிறைய சாலைகளில் பல குதிரைகள் சிலையாய் அமைதியாக நிற்கிறது
சிலர் இன்னமும் சாலைகளில் குதிரை பூட்டிய வண்டிகள் விடுகின்றனர்
இப்போது நீங்களே சொல்லுங்கள் குதிரையூர் என்ற பெயரும் சரிதானே ?
ஒரு விபரம் கூறினால் அதை கிண்டலென்று நீங்கள் கிண்டலடிப்பீர்கள்
சென்னை உட்பட பல ஊர்களில் ரொட்டி கடைகள் (பேக்கரி) பல உள்ளது
ஆனாலும் இங்குள்ள ரொட்டி கடைகள் போல தெருவுக்கு ஐந்து இல்லை
மேலும் இந்த கடைகளில் காலை மாலையில் வடை பஜ்ஜி கிடைக்கிறது
ஓட்டலை காட்டிலும் ரொட்டி கடையைத்தான் இங்கு விரும்புகின்றனர்
இப்போது நான் கூறாமல் நீங்களே சொல்வீர்கள் இது ரொட்டியூர் என்று
காளான் உணவு வகைகளுக்கு கோயமுத்தூர் முக்கியத்துவம் வாய்ந்தது
இந்த காரணத்திற்காக இந்த நகரத்தை காளானுர் என்றும் அழைக்கலாம்
இந்த பல்பெயர் கழுத்தறுப்பை முடித்தால் நலம் என்று நினைக்கிறீர்கள்
இதோ இப்போது முடித்துவிடுகிறேன், கோவை மண்ணில் பிறந்தவர்கள்
சாதாரண மக்கள் அல்ல, உயரிய பண்பும் மரியாதையும் கொண்டவர்கள்
எனவே இந்த அருமையான பருத்தியூரை 'பண்பூர்' என்று போற்றுகிறேன்