செப்பலோசை - ஒழுகிசைச் செப்பலோசை
இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகிய இரு வெண்டளைகளும் கலந்து வரும் வெண்பாக்கள் 'ஒழுகிசைச் செப்பலோசை' உடையன எனப்படும்.
பெரும்பாலான வெண்பாக்கள் இயல்பாகவே 'ஒழுகிசைச் செப்பலோசை' அமைப்புடனேயே அமைகின்றன.
ஏந்திசைச் செப்பலோசையும், தூங்கிசைச் செப்பலோசையும் அமைந்த திட்டமிட்டு எழுதிய பாடல்கள் மிகக் குறைவே!
'ஒழுகிசைச் செப்பலோசை' உடைய வெண்பாக்களின் உதாரணங்கள்:
இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்
முக்கண்ணன் மைந்தனாம் மூசிக வாகனன்
தக்க தருணத்தில் காப்பானே! - அக்கடவுள்
தாள்போற்றி ஐயா எழுதும் கவிதைகள்
நாள்தோறும் பெய்யும் மழை. 1 - மெய்யன் நடராஜ்
முக்கண்ணன் மைந்தனாம் மூசிக வாகனன்
தக்கபடி செய்வான் தயவினையே! - அக்கடவுள்
தாள்போற்றி அய்யா தருமிக் கவிதைகள்
நாள்தோறும் பெய்யும் மழை. 2 - எசேக்கியல்
இன்றைய புகழ்மாலை இரு பொருளைத் தருகிறது!? ஒன்று 'தரும் இக்' கவிதை, இன்னொன்று 'தருமி'க் கவிதை. இயற்கையிலேயே சிலேடை அமைந்து விட்டது. நானும் தருமி போலத்தான்.
என் மீது மதிப்புமிகு நண்பர்கள் திரு.மெய்யன் நடராஜ், திரு.எசேக்கியல் அவர்கள் கொண்டுள்ள அன்பும், நட்பும் மாணப் பெரிது. நன்றிகள் பல.
திக்குத் தெரியாத திண்டாட்டம் பேருந்தில்
எக்கா ளமிடுகின்ற எண்ணற்ற – மக்களே
கல்லூரி மாணவனே மாணவியே கட்டோடு
செல்வீர் வகுப்பிற்கு நேர்! -வ.க.கன்னியப்பன்
சிந்திய வெண்பனியால் செக்கச் சிவந்தவளே
சுந்தரனும் உன்னழகில் சொக்கிடுவான்! - சொந்தமெனக்
கொண்டிடவே ஆணும் கொடுத்திடுவா னுன்னையே
பெண்ணுக்குக் காதல் பரிசு. 3 - சியாமளா ராஜசேகர்
குருதியைச் சிந்தாமல் காயமுண்டாக் காமல்
இருதயத்தை பார்வை விளிம்பில் - கருணையின்றிக்
கள்ளி கனநொடி யில்துளைத்து விட்டாளே
அள்ளி அணைத்திடவோ நான்? வ.க.கன்னியப்பன்
சிந்தியல் வெண்பாக்கள் செய்தாயே அக்காளே
வந்துனை வாழ்த்தியே நின்றேனே - சிந்தையிலே
நீவை எனையும் தமையன்நான்! என்னன்புப்
பூவையே வாழ்வாய் மலர்ந்து! - விவேக் பாரதி
கனிகளை உண்ணும் குயில்களின் கூட்டில்
இனிதா(ய்) யிசைக்கும் குருவி - பனியுறங்கும்
பூவின் சிலிர்ப்பினில், குட்டி அணில்போல
தாவிக் குதிக்கும் மனம் 4 * வ.க.கன்னியப்பன்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
காதல் புரிகின்ற காதலரோ(டு) ஒப்பிடுங்கால்
காதல் கவிதைகளே காசினியில் ஏராளம்
ஆதலினால் அஃதை அகற்றிக் குமுகாயப்
பேதமையைப் பாசெய் பெரிது! - அகரம்.அமுதா
'ஒழுகிசைச் செப்பலோசை' உடைய குறட்பாக்களுக்கு உதாரணங்கள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்! 2 கடவுள் வாழ்த்து
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்! 260 புலால் மறுத்தல்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை! 411 கேள்வி
வித்தியாசம் கண்டறிந்து வெண்பா புனைதற்கு
புத்திக்குள் போட்டேன் புரிந்து. 1 - மெய்யன் நடராஜ், இலங்கை