நவராத்திரி சிறப்பு கொலு
நவராத்திரி சிறப்பு கொலு
நாங்கள் வசித்து வந்த பகுதியில் நவராத்திரி கொண்டாடாத வீடுகளே இல்லை என கூறலாம்.
சிறியதோ பெரியதோ என்று இல்லாமல் எல்லோர் வீட்டிலும் பொம்மை கொலு வைப்பதை
வழக்கமாக கொண்டிருந்தனர்.நவராத்திரி வருகிறது என்றவுடன் வீடே பரபரப்படையும். பலகைகளை
எடுத்து துடைத்து அதற்கு மேல் விரிக்க வேண்டிய புது துணிகளை எடுத்து மடித்து வைத்து,கலர்
கலரான காகிதங்களை வாங்கி அழகாக கத்தரித்து கூஜாக்கள், தோரணங்கள், சங்கிலிகள் செய்வதும்
வீடெல்லாம் குப்பை என்று அம்மா கூறியபடி என்னிடம் குப்பைகளை அகற்ற வைப்பாள் இது என்
விளையாடும் நேரத்தை குறைக்க என்னுள்ளே கோபம் வரும் ஆனால் வெளியிட முடியாது நான்
கடைக்குட்டியானதால்.
பின் நடப்பது பெட்டிகளில் இருந்து பொம்மைகளை எடுத்து துடைப்பது.இந்த வைபவம் இன்னும்
பெரியதாக நடக்கும். எல்லோரும் எதை செய்ய நான் அவர்கள் முடிக்க காத்திருப்பேன் ,பின்னர்
என்னிடம் அங்கு விழுந்த தூசி பொம்மைமூடிய காகிதங்கள் இவற்றை அம்ம எடுத்து என் கையில்
கொடுத்து குப்பை தொட்டியில் போடா சொல்வார். எனக்கு அப்பொழுது மனதில் வருவதெல்லாம்
இன்னைக்கு ராத்திரி தூங்கி நாளைக்கு பெரியவனாக எழ வேண்டும் என்பது தான். அவ்வாறே
கன்னத்தில் போட்டு கொண்டு குப்பை தொட்டியை நோக்கி கற்பனை பைக்கில் விரைவேன். .
வீட்டில் உள்ள பெண்கள் யாவரும் மற்ற வீடுகளுக்கு சென்று தங்கள் வீட்டிற்கு கொலு பார்க்க
அழைப்பது வழக்கம்அப்படி செல்பவர்களை தங்கள் வீட்டில் ஒரு பாடலையாவது பாடி மஞ்சள்
குங்குமமும் சுண்டலும் பெற்று வருவார்கள். சிறுவயதுளவர்கள் எல்லோரும் கூடி ஒவ்வொரு வீட்டிலும்
என்ன கிடைத்தது என்பதை பார்ப்பதும்,தங்களுக்கு பிடித்த சுண்டல் எந்த வீட்டில் இருக்கிறதோ
அங்கு மீண்டும் செல்வது கூட உண்டு.
எங்கள் வீட்டில் பெண் குழந்தை இல்லாததால் என் அம்மா செல்ல முடியாத நாட்களில் என்னை அவள்
செல்லாத வீடுகளுக்கு சென்று கூப்பிட வைப்பாள். சிறுவனானதால் நானும் சம்மதித்து கூப்பிட
செல்வேன்.அங்கு சென்றதும் என்னை அந்த வீட்டு பெரியோர்கள் என் பெயரை ஒரு பெண்ணுடைய
பெயரை வைத்து கூப்பிட்டு என்னிடம் ஏன் தலைக்கு சடை போடவில்லை,கண்ணுக்கு மை
தீட்டவில்லை பாவாடை கட்டவில்லை என சொல்லி கலாட்டா செய்வது வழக்கமாகியது. இது
எனக்கு அந்த வயதில் சிறிது வருத்தமேற்படுத்தியது ஆயினும் அம்மாவிற்காக அதை சட்டை
செய்யாமல்,தெரிந்த அம்பாள் பிள்ளையார் பாடல்களை பாடிவிட்டு சுண்டல் பெற்று கொண்டு
வருவேன். வீட்டில் வந்து அம்மாவிடம் அழுது கொண்டே இனிமே என்னை அனுப்பாதே எனக்கூறி
ஒரே ஆர்பாட்டம் செய்வேன். அம்மாவும் சிரித்துக்கொண்டே சரி சரி வந்து சாப்பிடு என எனக்கு
பிடித்த சுண்டலையோ இல்லை பால் அவிலையோ கொடுத்து என்னை சமாதானப் படுத்துவார்.
கொலுவின் படிகளை அமைத்து பொம்மைகளை வைத்தவுடன் அதற்க்கு கீழே மணலை பரப்பி வைத்து
அதில் பூங்காவோ, மலை கட்டி கோவிலையோ,விமான தளத்தையோ,ரயில் ஸ்டேஷனையோ
வீடுகளுடன் கிராமத்தையோ அழகாக நிர்மாணிப்பது வழக்கம்.அண்ணாவிற்கு இவைகள் செய்வதில்
மிக ஆர்வம். அம்மாவும் சேர்ந்து சிலவற்றை செய்வார்கள். நானும் எனக்கு முடிந்த அளவு
அவர்களுக்கு உடாவி செய்வேன்.அக்கம் பக்கதோர் வந்து அதை பார்த்து பாராட்டும் பொழுது எனக்கு
மிக மகிழ்ச்சியாக இருக்கும். நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவில் வருவதும் இருப்பதும்
ஒவ்வொரு வீட்டிலும் செய்யும் சுண்டலும்,நைவேத்தியங்களும் இனிப்பு வகைகளும்,காரங்களும்
தான். குழந்தைகளுக்கு இந்த ஒன்பது நாட்களும் கொண்டாட்டம்தான்.அவர்கள் எல்லோர் வீட்டிலும்
சென்று "அம்மா அம்மா கொலுவைத்த சுண்டல்"எனப் பாட்டுப் பாடி அதை பெற்று வீட்டில் வந்து
பிரித்து தின்பது அந்த காலத்து மகிழ்ச்சிகளில் ஒன்று.நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.
என்னுடைய பாட்டி அம்மா வெளியே கொலு அழைப்பிற்காக செல்லும் பொழுது எனக்கு
நவராத்திரியை பற்றி பல செய்திகளை கதைபோல கூறுவார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் கூறிய படியே எங்கள் வீட்டில் நவராத்திரி கொலு வைப்பதும்
நைவேத்தியம் வைப்பதும் முறையோடு அம்மா இந்த பண்டிகையை நடத்துவாள். .
நவராத்திரி சிறப்பு
இந்து மதத்தில் மட்டும்தான் நாம் பல உருவங்கள் கொண்ட தெய்வங்களை ஆராதனை
செய்கிறோம்.அந்த உருவங்கள் அந்த பரம்பொருள் எடுப்பதற்கு உண்டான காரணங்கள் அது
எவ்வாறு முடிவில் உருவ வழிபாட்டிற்கு வந்தது என்பதை வீட்டில் உள்ள தாத்தாக்களும் பாட்டிகளும்
வழிவழியாக கூறி நமக்கு அதன் முக்கியத்துவத்தையும் தெளிவு படுத்தியுள்ளனர். அதனால்
இந்துக்களுக்கு மற்ற மதங்களை காட்டிலும் பண்டிகைகளும் நிறைய உள்ளது. ஆண்களுக்கு உகந்த
ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்களுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த
நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் பொருள் ஒன்பது இரவுகள் இந்த ஒன்பது இரவுகளில்
பராசக்தி அரக்கனை சண்டையிட்டு முடிவில் வென்றாள். இந்த நவராத்திரியின் சிறப்பு அம்சம்
அவளின் பல உருவங்களைக் கொலு என்ற பெயரால் பொம்மைகளாக வைத்து வழிபடுவதே கொலு
என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தி யாக அலங்கரித்து
வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின்
அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று
அம்பிகையே கூறியிருக்கின்றாள் எனப் புராணங்கள் கூறுகின்றன. இனி நவராத்திரி கொலு எப்படி
அமைக்க வேண்டும் என்று பார்ப்போ ம். கொலு ஒன்பது படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
1. முதற் படி
ஓர் அறிவுள்ள உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.
2. இரண்டாவது படி
இரண்டு அறிவுள்ள உயிரினங்களான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாவது படி
மூன்று அறிவுள்ள உயிர்களான கறையான், எறும்பு போன்ற வற்றின் பொம்மைகள்.
4. நான்காவது படி
நான்கு அறிவுள்ள உயிர்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
5. ஐந்தாவது படி
ஐந்து அறிவு படைத்த உயிர்களான மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.
6. ஆறாவது படி
ஆறு அறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்.
7. ஏழாவது படி
மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் (ரமணர், வள்ளலார்)
போன்றோரின் பொம்மைகள்.
8. எட்டாவது படி
தேவர்கள், அஷ்ட திக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகளின்
பொம்மைகள்.
9. ஒன்பதாவது படி
பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை
வைக்கவேண்டும். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும்
என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
நவராத்திரி முதல் நாள் வழிபாட்டு முறை
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாகக் கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் கொண்ட
திருவாயும், முண்டமாலையும் அணிந்த
வன்முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும்
அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும்
இவளது கோபம் தவறு செய்தவர்களைத் திருத்தி நல் வழிபடுத்தவே ஆகும். மதுரை மீனாட்சி
அம்மனை முதல் நாளில் அண்ட சராசரங்களைக் காக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாட்டு முறை:
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாகக் கருதி வழிபடவேண்டும்.
வராஹி(பன்றி)முகமும் தெத்து பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய
சக்கரத்தை தாங்கிக் கொண்டிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியைத் தூக்கிக்கொண்டு
இருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து
விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர்
விற்றவிறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன்
சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தினை வலியுறுத்துவதாக நாம் இதைக்
கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாட்டு முறை:
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ
தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.
ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.
தேவலோகத்தை பரிபாலனம்
செய்பவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்பு கிறவர்களுக்கு இவளின்
அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவற்கு
பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும். இன்று மீனாட்சி அம்மன் கல்
யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொங்கல்.
நவராத்திரி நான்காம் நாள் வழிபாட்டு முறை:
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில்
ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். இன்று
மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சியளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாட்டு முறை:
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழி படவேண்டும். அன்னை மகேஸ்வரனின்
சக்தியாவாள். திரி சூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில்
எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களமும் தருபவள்.
தர்மத்தின் திருவுருவம். கடினஉழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள்
அவசியம் வேண்டும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில்
காட்சியளிப்பார்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
நவராத்திரி ஆறாம் நாள் வழிபாட்டு முறை:
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும்
உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.
சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள். இன்று மதுரை மீனாட்சி அம்மன்
பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங்காரத்தில் அருள்புரிவார்.
ஆறாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய் சாதம்.
நவராத்திரி ஏழாம் நாள் வழிபாட்டு முறை:
ஏழாவது நாள் அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடாரி,
கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு,
சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு
பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல
ஐசவரியங்களை யும் தருபவள் இந்த அன்னையாகும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவசக்தி
கோலத்தில் மக்களுக்கு அருள் பாலிப்பார்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கற்கண்டுச் சாதம்.
நவராத்திரி எட்டாம் நாள் வழிபாட்டு முறை:
இன்று அன்னையை நரசிம்ஹியாக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரதாரிணியாக சிம்மவாகனத்தில் காட்சி தருபவள்.
சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். இன்று மதுரை மீனாட்சி
அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
நவராத்திரி ஒன்பதாவது நாள் வழிபாட்டு முறை:
இன்று அன்னையை ப்ராஹ்மியாக வழி பட வேண்டும்.
அன்னவாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச்
செல்வம்பெற அன்னையின் அருள் அவசியமாகும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை
செய்யும் கோலத்தில் அருள் பாலிப்பாள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கார வடசல்.