நல்கூர்ந்தார் என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – நாலடியார் 298

நேரிசை வெண்பா

நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம் 298

- மானம், நாலடியார்

பொருளுரை:

இவர் நல்லவர், மிகவுங் கனிவுடையர், ஆயினும் வறிஞராயிருக்கின்றார் என்று இகழ்ச்சியால் நல்லியல்புகளை இகழ்ந்து கூறிச் செல்வர்கள் சிறுமைப் பார்வை பார்க்கும் பொழுது,

தலைமக்களான சான்றோர்களின் உள்ளம் கொல்லனது உலைக்களத்தில் ஊதியெழுந் தீச்சுடர் போல் உள்ளே அழல் கொள்ளும்.

கருத்து:

மெய்யறிவின்றி நல்லியல்புகளைப் பழித்தொதுக்கும் செல்வர் உரைகட்குச் சான்றோர் உள்ளம் மிகவும் அழலும்.

விளக்கம்:

சிறு நோக்கு, பொருள்செயா நோக்கு; "சிறு நகை"1 என்புழிப்போல.

நல்லியல்புகளின் மீது மதிப்பின்மையே மானிகள் உள்ளம் அத்தனை அழல் கொள்ளுதற்கு ஏதுவாயிற்று;

தலையாய என்றார் அச்செல்வர் முதல் அனைவரினும் மேலாயவரென்றற்கு;

சினம் ஆறுதல் அவர் இயல்பாகலின், உள்கனலும் எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-22, 4:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே