உயர்வாகும் வாழ்க்கை
உயர்வாகும் வாழ்க்கை
====================
நிலவோடுல விடுவோமென நினைத்தாரெவ ருண்டு?
நினைவோடதை முயன்றேவிட நிசமானது இன்று
மலரோடுற வுறலேதரும் மதுபோதையை யென்று
மனதோடொரு நினைவேவரின் மறுத்தேவிடு நன்று
புலராதுள பொழுதேயிலை புரிந்தேயுகம் வென்று
புதுப்பாதையில் நடப்பாயெனில் புகழ்மாலைக ளுண்டு
உலகோபல ருருவாக்கிய உயர்வானவை கொண்டு
உழலாவிடி லெதுவாமுனக் கெனவேபொரு ளுண்டு?
*
முயலாமையு முடவாதமு மொருமாதிரி ஊனம்
முயலாமையைத் தொலைத்தேவிட முடிவாயுறு ஞானம்
இயலாமையி லிளைப்பாறிட இதமாயிடு தானம்
இலையேலது கரமேந்திடத் தரலாமொரு ஏனம்
அயலானொடு உறவாயிரு அதுவேகுளிர் பானம்
அதைப்பார்த்திடப் புளகாங்கித மடைந்தேயழும் வானம்
நயமாயுரை நலமேநினை நமக்காயுள மானம்
நமதாருயி ரெனவானவ ருடனேவர வேணும்.
*
அவமானமு மிழிவாதலு மருகேயுளத் தீயே!
அவதானமு மிலையேலெனி லதிலேவிழு வாயே!
உவமானமு முவமேயமு மொருங்கேயுள போதும்
உதவாதென வறியாதவ ரையுமேவிடு நீயே!
தவறாயினும் சரியேயென தகராறுறு வோரைத்
தவறாதுன தருகேவிடத் தவறாகிடு மேயே!
சுவராகிலும் மனதோடுள சுயவேதனைக் கூறச்
சுகமாயதில் குளிர்காய்ந்திட வழியேசமைக் காதே!
*
வரமாயிலைத் தவமாவென வழக்காடுதல் விட்டு
வரமேயென உறவாடிடு வரலாறுக ளுண்டு
தரமாயிலைக் குறையாவெனத் தடுமாறுதல் தள்ளித்
தரமாயுனை உருவாக்கிட தகராறுக ளில்லை
மரமாயிர வுனையேயவன் படைத்தானென வெண்ணி
மலைபோலவு மசையாதிர மரியாதையு மில்லை
உரமேயுற உருவாகிய உனையேவர வேற்கும்
ஒருவேட்கையை உயிரோடிணை உயர்வாகிடும் வாழ்க்கை.
*
மெய்யன் நடராஜ்
(10 - 10 - 2022 )