தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் outsourcing ஒப்பந்தமுறையில் 13ஆண்டுகளாக பணியாற்றுகின்ற கணினிப் பணியாளர்கள்
இந்த நாட்டிலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் பலவேறு பிரச்சனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன, ஆனால்! அவைகள் அனைத்தையும் இந்த உலகம் அறிந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.
வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சட்டப்படியான ஜனநாயக உரிமைகளை நுகர்வதற்கும், ஒவ்வொரு சாமானிய தனி மனிதனும் இந்த நாட்டிலே கடுமையாக போராட வேண்டிய நிலை இருக்கிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பதிமூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்ற கணிணிப் பணியாளர்களின் வாழ்நிலை துன்பமும் துயரமும், வறுமையும் வாடலும் நிறைந்ததாக இருக்கிறது.
2009ஆம் ஆண்டு தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆறுமாத காலம் வேலை செய்வதற்கு இருநூறுக்கும் மேற்பட்ட கணிணிப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள் இன்று பதிமூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்றும் செக்குமாடுபோல் அதே வேலையை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள், இவர்களை நேரடியாக பணியில் சேர்த்துக்கொள்ளவுமில்லை, பணி உயர்வுகள் எதுவும் வழங்கப்படவுமில்லை, எந்த ஒரு சலுகைகளும் கொடுக்கப்படவுமில்லை.
அரசியலமைப்பின் குறைந்தபட்ச ஊதிய விதிப்படி இவர்களுக்கு சரியான ஊதியம் வழங்காமல் மிகவும் குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது, இந்த ஜனநாயக நாட்டிலே ஒவ்வொரு குடும்பமும் வறுமையிலிருந்து மீண்டு, விலைவாசியை சமாளித்து தனது தேவைகளை பூர்த்திசெய்து கௌரவமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் குறைந்தபட்ச ஊதியசட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது, அந்த வகையிலே பார்க்கப் போனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கணினித் தொழிலாளியாக பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு 17 ஆயிரத்திற்கும் மேலாக ஊதியம் வழங்கப்படுவதுதான் சரியான அளவுகோலாக இருக்குமென்றுத் தோன்றுகிறது, இன்னும் சொல்லப்போனால் இந்த கணிணிப் பணியாளர்களுக்கு பதிமூன்று ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளதால் இவர்களுக்கு மாத ஊதியம் இருபது ஆயிரத்திற்கும் மேல் தாராளமாக தரலாம். ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் அவர்களுக்கு ஒப்பந்தத்திற்கு ஆள் வழங்கும் நிறுவனமும் ஒருபோதும் இதுகுறித்து யோசிப்பதில்லை என்பதுதான் வேதனை.
ஓய்வின்றி தினமும் பணியாற்றுகின்ற கணிணிப் பணியாளர்களுக்கு என்ன என்னப் பணி, நாள் ஒன்றுக்கு எத்தனைமணி நேரப் பணி என்று எந்த அட்டவணையும், வரைமுறையும் இதுவரை முறையாக வழங்கப்படவில்லை என்று அறிய முடிகிறது, எனவேதான்! இவர்களின்மீது நேரகாலமின்றி பல்வேறுப் பணிகள் திணிக்கப்படுவதாக கூறப்படுகின்றன, நயமான பேச்சாலும், சொற்ப பணத்தாலும், அதிகார மிரட்டலாலும் தங்கள் உழைப்பு சுரண்டப்படுவதாக சில கணினிப் பணியாளர்கள் புலம்பித் தவிக்கிறார்கள்.
எட்டுமணி நேர பணிக்கு பத்துமணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம், என்று தினமும் கூடுதல் வேலை செய்கின்ற நிலை இவர்களின் அன்றாட வாழ்க்கையில் நீடித்துக்கொண்டு இருக்கிறது, (outsourcing ) என்று சொல்லப்படுகின்ற மிகவும் கொடிய ஒப்பந்தமுறையில் இவர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ள காரணத்தால் இவர்கள் அங்கீகரிக்கப்படாத அடிமைகளைப்போல் வாழவேண்டிய நிலை இருக்கிறது, சுய உரிமைகளை வாய்விட்டு பேச முடியாது, அப்படி பேசினால் சில அதிகாரிகள் இங்க இப்படித்தான் பிடிக்கவில்லையெனில் வேலையைவிட்டு நின்றுகொள் என்கிறார்களாம், வேறு சில அதிகாரிகளோ வேலையைவிட்டு நிறுத்திவிடுவோம் என்று மிரட்டுகிறார்களாம், இப்படி கடினப்பட்டு வேலை செய்தும் குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுவதால் இந்த சமூகத்தில் இவர்களால் தன்மானத்தோடும் சுதமரியாதையோடும் வாழமுடியாத அவலநிலை நீடிக்கிறதாக கூறப்படுகிறது.
அனைத்தும் கணினிமயம் அனைத்தும் டிஜிட்டல் மயம் என்கிற ரீதியில் IT நிறுவனத்தைப்போல் காலையிலிருந்து இரவுவரை தினமும் பணிசெய்கிறார்கள், IT நிறுவனத்தில்கூட ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை சரிசெய்து கொள்ள முடிகிறது, அதற்கான தொழிற்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் அனுமதி இருக்கிறது, ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு கணினித் துறையில் 13 ஆண்டுகளாக outsourcing ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்ற கணிணிப் பணியாளர்கள் வேலை செய்யும்போது கவனக்குறைவால் ஒரு சிறு தவறு நேர்ந்து விட்டாலும் கூட அதை தொழிற்நுட்ப முறையில் உடனே சரி செய்துவிட இயலாது அதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடையாது, அதற்கு மேலிடத்தில் அனுமதிபெற்று சரி செய்வதற்குள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள், அதோடில்லாமல் இதற்காக உயர் அதிகாரிகளிடம் நிறைய வாங்கி கட்டிக்கொள்ள வேண்டுமாம், மிகவும் நுட்பமான இணையதளப் பணிமுறையில் எந்த ஒரு சிறு தவறும் மறந்தும்கூட செய்துவிடக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றனவாம், எனவே இந்த இணையவழி வேலை என்பது ஒரு ஒருவழிப் பாதையாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள், தான் செய்கிற வேலையில் யாரும் தெறிந்து தவறு செய்வதில்லை, தெரியாமல் கவனக்குறைவால் ஏற்படுகிற சிறு சிறு தவறுகூட தேசகுற்றம் புரிந்ததை போல் அதிகாரிகளின் கேள்விக்கணைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படி கடினப்பட்டு வேலை செய்கினற முந்நூறுக்கு மேற்பட்ட கணிணிப் பணியாளர்களின் குடும்ப வாழ்நிலை உயரவேண்டுமெனில் அவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும் பணி நிரந்தர நிலையும் கிடைத்தால் மட்டுமே முடியும், மேலும் என்ன என்ன வேலை எத்தனை மணிநேர வேலை என்பது தெளிவாக கூறப்பட்டால் அவர்களுக்கான மன அழுத்தம் சற்று ஆசுவாசமாகும்.
உலக தொழிலாளர் சட்டப்படி ஒரு நாளைக்கு எட்டுமணி நேர வேலை என்று வரையறுக்கப்பட்டுள்ளது, இதை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் தனியார் கம்பெனிகளும் கடைப்பிடித்து வருகின்றன, அந்த வகையிலே காலையில் 8 மணிக்கு வேலைக்குச் சென்றால் 4 மணிக்கு வீடு திரும்ப வேண்டும், 9 மணிக்கு வேலைக்குச் சென்றால் 5 மணிக்கு வீடு திரும்ப வேண்டும், 10 மணிக்கு வேலைக்குச் சென்றால் 6 மணிக்கு வீடு திரும்ப வேண்டும், இதுதான் எட்டுமணி நேர வேலையாகும், எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக வேலை செய்யும் பட்சத்தில் அது கூடுதல் நேர பணியாக கருதப்படும் இதை ஆங்கிலத்தில் ஓவர் டைம் என்று சொல்லப்படுகிறது, தொழிலாளர் நல விதிப்படி ஓவர் டைம் என்று சொல்லப்படுகிற கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், சாதாரணமாக ஒருமணி நேரத்திற்கு பத்து ரூபாய் கூலி என்றால் கூடுதல் நேர பணிக்கு இருபது ரூபாய் வழங்க வேண்டும், அப்படி பார்க்கையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கிடங்கு கணினிப் பணியாளர்கள் தினமும் 3 மணிநேரம் 4 மணிநேரம் 5 மணிநேரம் என்று தினமும் கூடுதலாக வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள், அதற்காக முறையான கூடுதல் ஊதியம் எதுவும் இதுவரை வாழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது, இது அரசியலமைப்பு வழங்கும் தொழிலாளர் நல உரிமை சாசனத்திற்கு புறம்பான செயலாகும், அரசு கார்ப்பரேட் நிறுவனம் இப்படி செயல்படுவதை தவிர்த்தால்தான் அரசு வலுவான வலிமையை பெரும்.
மேலும் அம்மா சிமெண்ட் ஆன்லைன் பதிவு, ஸ்கேன் மற்றும் இன்வாய்ஸ் வேலைகளை தனியாக கூடுதல் நேரம் எடுத்து செய்யவேண்டிய நிலை உள்ளதால் இதற்க்கு டான்செம் சிமெண்ட் நிறுவனம் எந்த ஒரு ஊதியத்தையும் இதுவரை வழங்கவில்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வேலைகளை மட்டுமே செய்வதற்கு 8 மணி நேரம் போதவில்லை என்பதால் கூடுதல்நேர ஊதியம் இல்லாமல் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது, இந்நிலையில் டான்செம் நிறுவனத்தின் வேலைகளும் கூடுதல் நேரம் ஒதுக்கி செய்ய வேண்டி உள்ளதால் அம்மா சிமெண்ட் வேலைக்கு தனியாக ஊதியம் வழங்கப்பட வேண்டியதுதான் சரியான முறையாகும் ஆனால் அந்த வேலைக்காக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை என்று கூறுகிறார்கள்.
மேலும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு இவர்களுக்கு போனஸ் என்று சொல்லப்படுகிற ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்பட்டதே இல்லை என்று சொல்லப்படுகிறது, காய்கறி கடை, ஜவுளிக் கடை, தனியார் கம்பெனிகள் என்று எல்லா நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குகிறார்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்கூட தங்கள் நேரடித் தொழிலாளர்களுக்கும் காப்ரேட் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்குகிறது, ஆனால் பதிமூன்று ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்திற்கு ஓய்வின்றி அலுப்பு சலிப்பின்றி பணியாற்றுகின்ற கணினிப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் இல்லையே என்று ஒருபோதும் வருந்தியதில்லை, outsourcing ஒப்பந்தம் என்பதால் உங்கள் கம்பெனியிடம் கேளுங்கள் என்றுகூறி நழுவி விடுகிறார்களாம் , எங்கள் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒப்பந்தத்தில் வேலை செய்கின்ற உங்கள் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குங்கள் என்று இவர்களால் சொல்ல முடியாதா, பதிமூன்று ஆண்டுகளாக எந்தவித சுனக்கமும் மறுப்புமின்றி எல்லாவற்றிற்கும தலைபணிந்து வேலை செய்கின்ற கணினிப் பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
பெண் கணினிப் பணியாளர்களுக்கு பேறுகாலங்களில் விடுப்பு எதுவும் கிடையாது என்பதுதான் மிகவும் கொடுமையான மனிதத் தன்மையற்ற ஒரு விடயமாகும், அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பேறுகாலங்களில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குகிறது, ஆனால் outsourcing ஒப்பந்தமுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றுகின்ற பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது, இதனால் இயல்பாக பிறக்கவேண்டிய பல சிசுக்கள் அறுவை சிகிச்சையின் மூலம் எடுக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது, இந்த அவலநிலை மாறவேண்டும் பெண்களுக்கு பேறுகாலங்களில் இருமாத விடுப்பும், மாதம் இருநாள் விடுப்பும் மனிதாபிமான அடிப்படையில் வழங்குவதுதான் ஒரு நல்ல நிறுவனத்திற்கு அழகாகும், அரசியலமைப்பும் அரசும் வழங்குகின்ற உரிமைகளையே சில நிறுவனங்கள் மறுக்கின்றன இவர்கள் தனிப்பட்ட முறையில் சாமானிய ஊழியர்களுக்கு என்ன நன்மையை வழங்கிவிடப் போகிறார்கள், பெண் கணினிப் பணியாளர்கள் வெறும் பெயருக்காக வழங்கப்படுகின்ற மாதம் ஒருநாள் CL என்று சொல்லப்படுகின்ற சிறு விடுப்பையே நுகரமுடியாமல் தவிக்கிறார்கள், இன்னும் சொல்லப்போனால் வாரம் ஒருநாள் ஞாயிறு விடுமுறைகளில்கூட வேலைசெய்யவேண்டிய நிலை இவர்களுக்கு இருக்கிறது என்பதுதான் இன்னும் வேதனை, குடும்ப வறுமையின் காரணமாக பதிமூன்று ஆண்டுகால வயதை இழந்துவிட்டு வேறு வேலைக்கு செல்ல முடியாத outsourcing ஒப்பந்த கணினிப் பணியாளர்கள் எவ்வளவு இடித்தாலும் தாங்குவார்கள் என்பதை கார்ப்ரேட் நிறுவனம் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதாகவே சொல்லத் தோன்றுகிறது.
பதிமூன்று ஆண்டுகால வாழ்க்கையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றியே கழித்திருக்கிறார்கள், outsourcing என்னும் வெளிப்புற தொழிலாளர் என்கிற ஒரே காரணத்தால் இவர்களின் வாழ்நிலை மேம்படாமல் சூனியமாகவே இருக்கிறது, இவர்களுக்குப் பிறகு பணியில் சேர்ந்த பருவகால ஊழியர்கள் எல்லாம் பணி நிரந்தரம் பெற்று, பதவி உயர்வுப் பெற்று, ஊதிய உயர்வுப் பெற்று நல்ல நிலையில் இருக்கிறார்கள், மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருளை வழங்குகின்ற ஒரு நிரந்தரமான முக்கியமான மாநில அரசின் நிறுவனமான நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு எதற்காக outsourcing ஒப்பந்த முறையில் கணினிப் பணியில் அமர்த்தப்பட வேண்டும், இந்த கார்ப்ரேட் நிறுவனத்தால் கணினிப் பணியாளர்களை நேரடியாக பணியில் சேர்க்க முடியாதா? அது என்ன அவ்வளவுப் பெரிய கடினமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன, எங்களை நேரடியாக பணியில் சேர்த்துக்கொள்ளுங்கள், கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கி வாழ்வளியுங்கள், கழகத்திற்கு நேர்மையாக உழைக்க நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் கெஞ்சி அழுது அனுப்பப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்களும் கார்ப்ரேட் நிறுவனத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது, அரசு கருணை அடிப்படையில் இவர்களுக்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள் என்று சொன்னாலும்கூட அதை செய்வதற்கு கார்ப்ரேட் நிறுவனம் விரும்புவதாகத் தெரியவில்லை, கணினிப் பணியாளர்கள் வாழ்க்கையை தொலைத்த இடத்தில்தான் தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள், அந்த தேடலே தவறானது என்று முழுமையாக அவர்களை ஒதுக்கித் தள்ளுவது மனிதநேயமான செயலாக இருக்க முடியாது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நீண்ட காலமாக outsourcing என்கிற மிகவும் கொடிய ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்ற கணினிப் பணியாளர்கள், அந்த ஒப்பந்தமுறையில் பணியாற்ற சிறிதும் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள், மிகவும் கொடுமையான இந்த ஒப்பந்த முறையே வேண்டாம் என்று வெறுக்கிறார்கள், நாங்கள் நேரடியாக கார்ப்ரேட் நிறுவனத்திற்கு வேலைசெய்துதர விரும்புகிறோம் தயவு செய்து எங்களை ஒப்பந்தப் பிடியில் இருந்து விடுதலை அளியுங்கள் என்று ஒவ்வொருக் கணினிப் பணியாளரும் கெஞ்சுகிறார்கள் ஆனால் கார்ப்ரேட் நிறுவனமோ காதில் வாங்கவில்லை, தொடர்ந்து outsourcing என்னும் கொடிய ஒப்பந்தமுறையில் இருந்து மேலும் மேலும் ஆள்பிடிக்கும் வேலையை தொடர்ந்துகொண்டு இருப்பதாக தெரிகிறது, இது வறுமையில் இருந்து தப்ப நினைக்கும் அப்பாவித் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகவேத் தோன்றுகிறது என்று outsourcing முறையில் பணியாற்றுகின்ற அப்பாவித் தொழிலாளர்கள் கருதுகிறார்கள்.
கணினிப் பணியாளர்களை நேரடியாகப் பணியில் அமர்த்துவதால் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு என்ன பிரச்சனை, கணினி இல்லையென்றால் கழகமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கணினியின் வேலை மிக மிக முக்கியம் என்று ஆகிவிட்ட்டது, கணினிப் பணியாளர் இன்றி எந்த ஒரு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளும் இயங்காது என்று சொல்லக்கூடிய அளவிற்கு கழக நகர்வுகளின் அச்சாணியாக இருக்கிறார்கள், இது மிகைப்படுத்தப்பட்ட விடயமல்ல என்று சொல்லப்படுகிறது. ஏனெனில்! அனைத்து வேலைகளும் கணினி மயம் அதுவும் முழுமையான இணையதள மயமாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் நேரடியாக கார்ப்ரேட் நிறுவனத்திற்கு பணியாற்ற துடிக்கும் கணினிப் பணியாளர்களை, ஒப்பந்தமுறையில் இருந்து மீட்டெடுத்து அவர்களை நேரடியாக பணியில் சேர்ப்பதன்மூலம் கார்ப்ரேட் நிறுவனம் எந்த பின்னடைவையும் சந்திக்காது மாறாக கணினிப் பணியாளர்கள் நன்றியுடன் கடமையாற்றுவார்கள் இதுவே கார்ப்ரேட் நிறுவனத்திற்கும் அரசிற்கும் நற்பெயரை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நினைத்தால் கணினிப் பணியாளர்களை நிரந்தர படுத்துவது ஒன்றும் இயலாத காரியமல்ல, ஆனால் ஏனோத் தயக்கம் காட்டுகிறார்கள், அந்த தயக்கத்தை களைய வேண்டியது கணினிப் பணியாளர்களின் கடமை ஆகும். நீண்ட நெடுங்காலமாக outsourcing என்கிற கொடிய ஒப்பந்த முறையில் பணிசெய்து துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் கணினிப் பணியாளர்களின் வாழ்நிலை மேம்பட வேண்டும், வெளியுலகம் அறிந்திடாத அவர்களின் வாழ்நிலையை இந்த சமூகத்தில் பேசும்பொருளாக மாறவேண்டும், அதனால் ஏதேனும் மாற்றம் நிகழ வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே இந்த கட்டுரைப் பதிவிடப்படுகிறது.