பிள்ளை ஆட்டம்
பிரகாரம் காலியாய்க் கிடக்க
ஓடியோடி விளையாடுகிறது
பிள்ளை
கருங்கல்லில் தப் தப் என்று
சத்தமெழ ஓடும் அவளை
ஐந்தெழுத்து மனனம் செய்து கொண்டிருந்த
கிழவன் விழியுயர்த்திப் பார்க்கிறான்
நெஞ்சுருக கோபுரம் பார்த்தவள்
கண் நிறையப் பார்க்கிறாள்
தூர தூரமாய் அமர்ந்தவர்கள்
பார்க்கிறார்கள்
அபிஷேகப் பாலுக்காகக் காத்திருக்கும்
பூனைகளும் பசித்த கண்களில்
பார்க்க
பிள்ளை ஓடி விளையாடுகிறது
கவனம் கலைந்த ஈசன்
கர்ப்பம் விட்டிறங்கி
வந்து நிற்க
பின்னால் வந்த
கொடியிடை உமையாள்
பிள்ளைக்கு காலிடறிடப் போகிறது
என்கிறாள்
அபிஷேகம் அபிஷேகம் என்று யாரோ அழைக்க
ஜடாமுடியைத் தூக்கிக் கொண்டோடும் ஈசன்
சத்தம் வராமல் அடியெடுத்து வைக்க
பிரயத்தனப்படுகிறான்
சிரித்த
உமையோ சலங்கை அதிராமல் நடந்து போகிறாள்