மலரே நீ மலரா

துளிர்விடும் தளிரில் துடிப்புடன் தழைத்திட
அரும்பிய உனை அழைத்தேன் அரும்பென்று

கும்பிடும் கரம்போல் குவிந்த இதழ்களாய்
மொக்குவிடும் உனை அழைத்தேன் மொட்டென்று.

நாசிகள் நுகர்ந்திடும் நல்லதோர் வாசமாய்
முகிழ்க்கும் உனை அழைத்தேன் முகையென்று

புதிய விடியலில் விழிக்கும் மூடியவிழிகளாய்
பூக்கின்ற உனை அழைத்தேன் மலரென்று.

மதுரம் சொரிந்து மகரந்தம் சேர்ந்திட
மலர்ந்திட்ட உனை அழைத்தேன் அலரென்று.

இளமை இழந்திட இதழ்கள் சுருங்கிட
வாடினாய் உனை அழைத்தேன் வீ 'யென்று .

காற்றோடு கலந்தாய் காலத்திலே கலைந்தாய்
வதங்குகிறாய் உனை அழைக்கிறேன் செம்மலென்று.

எழுதியவர் : (25-Oct-22, 11:32 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 165

மேலே