சிந்தனை கவிதை
*தண்ணீர் ! தண்ணீர் !*
 வான் புகழ் வள்ளுவன் 
வான் சிறப்பு என்ற 
அதிகாரத்தை 
முதலில்
வைத்ததிலிருந்து 
நன்றாகத் தெரிகிறது....
உலகத்தில்
தண்ணீரின் 
அதிகாரம் என்னவென்று...?
தண்ணீரை விட 
பால் 
மதிப்பு மிக்கது என்றாலும்....
தொண்டையின் தாகத்தை 
பாலைக் கொண்டு 
தணிக்க முடியுமா....? 
தண்ணீரை விட 
எண்ணெய் 
விலை மிக்கது என்றாலும்
அழுக்குகளை 
எண்ணெய் கொண்டு
நீக்க முடியுமா.....?
தண்ணீரை விட 
பழரசங்கள் 
சுவை மிக்கது என்றாலும்.....
உணவுகளை 
பழரசம் கொண்டு 
சமைக்க முடியுமா.....?
நேற்று
அனாவிசியமாக
தண்ணீரை
செலவழித்ததால் .....
இன்று நாம் 
தண்ணீரைக்
காசு கொடுத்து 
வாங்கும் நிலை 
வந்ததுள்ளது.. 
இனியும் 
திருந்தவில்லை.... 
நாளை 
காசு கொடுத்தாலும் 
வாங்க முடியாத 
நிலை வரும்.....?
அன்று
தண்ணீர் குழாயில் 
ஒவ்வொரு நாளும் 
தண்ணீர் வந்தது.... 
பிறகு....
ஒரு நாள் விட்டு 
ஒரு நாள் வந்தது 
அதன் பின்பு....
மூன்று நாள் விட்டு 
ஒரு நாள் வந்தது 
அடுத்தது....
ஒரு வாரம் விட்டு 
ஒரு நாள் வந்தது 
இப்போது..... 
இரண்டு வாரம் விட்டு 
ஒரு நாள் வருகிறது.... 
இது நன்னீரின் அளவு 
நாள்தோறும் 
குறைந்து வருகிறது என்பதை 
நமது கன்னத்தில் 
அறைந்து 
சொல்கிறது அல்லவா....?
நீரின் மூலம் மழை
மழையின் மூலம் மரம்....
நாம் 
அந்த மரங்களை 
எல்லாம் வெட்டி 
நிர்மூலமாக்கிக்
கொண்டிருக்கிறோம்....
பணம் தான் 
உலகத்தின்  மூலம் என்ற அறியாமையால்......
நீரின் ஆதாரங்கள்
ஆறு ஏரி 
கிணறு குளம் தான் 
ஆனால் நாமோ 
ஏரிகளில்
 வீடு கட்டுகிறோம்.... 
ஆறுகளில் 
கழிவுநீர் சேர்க்கிறோம்.... 
குளங்களில் 
குப்பைகளை கொட்டுகிறோம்...
கிணறுகளை 
தூர்வாராமல் விடுகிறோம்...
நீர் ஆதாரங்களை அழித்தால் 
இனி மனித சேதாரங்கள் 
அதிகமாகவே இருக்கும்.....
கால்வாய் பாசனம் 
சொட்டுநீர் பாசனமானது.... 
சொட்டுநீர் பாசனம் 
தெளிப்பு பாசனமானது.... 
நாளை தெளிப்பதற்குக் கூட 
நீர் இல்லாமல் 
போகலாம் ........?
இனியும் 
நாம் விழித்துக் 
கொள்ளவில்லை 
நம்முடைய 
தலைமுறைகள் 
கல்லையும் மண்ணையும்
தின்றுவிட்டு 
தூங்கும் நிலை வரும்....!! 
இனியாவது 
பாக்கெட்டில் 
இருக்கும் பணத்தை 
தண்ணீர் மாதிரி 
செலவழிப்போம்.... 
பக்கெட்டில் இருக்கும் 
தண்ணீரை 
பணம் மாதிரி 
செலவு செய்வோம்....
நாளைய தலைமுறைக்கு 
தண்ணீர் 
சேர்த்து வைப்போம் 
தாகத்தை 
தீர்த்து வைப்போம்.....
      *கவிதை ரசிகன் குமரேசன்*
💧💧💧💧💧💧💧💧💧💧💧

