இயற்கையை இயற்கையாக
மனிதன் மிகப்பெரிய
சுயநலவாதி
உலகம் பிறந்தது தனக்கென
எண்ணினான்
காடுகள் அழித்தான்
வீடுகள் ஆக்கினான்
ஆற்றின் வயிற்றைக் கிழித்து
மணல் வாரினான்
ஏரியை பிளாட் போட்டு
ஏரியாவாக ஆக்கினான்
குளங்களைச் சுருக்கி
குட்டையாக மாற்றினான்
குட்டை வெளியேற்றி
குட் பை சொன்னான்
மலையை அறுத்து
மழையை நிறுத்தினான்
காசுக்காக காற்றையே
மாசாக்கினான்
பூமியை ஆஞ்சியோ செய்து
தண்ணீரை உறிஞ்சினான்
நெகிழியை உலகெங்கும் பரப்பி
பூமியை மூச்சடைத்தான்
பொறுமை கொண்ட பூமியின்
அருமை அறியாமல் ஆர்ப்பரித்தான்
வெகுண்டது பூமி பூகம்பமாய்
இயற்கை இயல்பு மீறி சீறியது
கண்ணுக்கு தெரியாத கொரானா
மண்ணுக்கு அனுப்பியது மாந்தரை
சொந்தக் காசில் சூனியம்
வைத்தது போல் அரண்டான்
தவறை உணர்ந்தது போல்
பாசாங்கு செய்தான்
இயற்கைக்குத் தெரியும் மனிதனின்
செயற்கைத் தனத்தை
ஏ மானிடா
இயற்கையை இயற்கையாக
இருக்க விடுங்கள்