உங்களுக்காக ஒரு கடிதம் 33

வணக்கம் நண்பர்களே...
நீ..........ண்ட இடைவெளி உண்டாகிவிட்டது. கால முடிகிச்சுக்குள் சிக்கியதால் வந்த இடைவெளி. போனது போகட்டும்..இனி தொடருகிறேன். இன்றைய மாணவர்களின் இளைஞர்களின் மன அழுத்தங்களையும்.. போராட்டங்களையும் பார்த்தோம். நாணயத்தின் மறுபக்கத்தை பாப்போம்.அவர்களின் சவால்கள் ஒரு புறம் இருக்கட்டும். கல்வி புகட்டும் ஆசிரியர்களின் கொடுமைகளை கொஞ்சம் பாப்போம்.
முன்பே சொன்னதுபோல் மாதா..பிதா..குரு...தெய்வம் என்று பெரியவர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அம்மா அப்பாவிற்கு அடுத்த ஸ்தானம் குருவிற்கு.அதாவது ஆசிரியர்க்கு. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று எல்லார்க்கும் தெரிந்த விஷயம்தான். வெளிச்சம் போட்டு தினமும் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரேயடியாக எல்லோரையும் அப்படி எடுத்து கொள்ள முடியாது. சிறு சதவிகித கருப்பு ஆடுகள் செய்யும் இந்த கொடுமைகள் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பெயரையும்...மரியாதையையும் கெடுத்து குட்டி சுவராக்கி..நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டதே.என்ன செய்ய? மகள் போல் இருக்கும் மாணவியை இல்லை சகோதரியை போல் இருக்கும் இளம் பெண்ணை வன்கொடுமை செய்வதில்லாமல்...அதை காணொளி மூலம் படம் பிடித்து அதை காட்டி காட்டி...அந்த இளம் மொட்டை கசக்கி..அதைவிட கொடுமை மற்ற நண்பர்களுக்கும் பந்தியிடுவது என்ன விதத்தில் நியாயம்? அதற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல் உயிரையே எடுப்பது இல்லை எடுக்க வைப்பது கொடுமையல்லவா? உங்களை முழு மனதோடு நம்பி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றவர்களை எண்ணிப்பார்க்க மறந்துவிட்டீர்களே. இல்லை என்ன செய்து விடமுடியும் என்கின்ற திமிரா? தெனாவெட்டா? மாதா..பிதா..குரு...தெய்வம் என்கின்ற வரிசையிலிருந்தே தூக்கி எறியப்பட்டு விட்டேர்களே. ஒரு தடவை மரியாதை இழந்து விட்டால்...மரியாதை போனது போனததுதான்.
வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு மாணவரை நீங்களெல்லாம் ஏணியாயிருந்து ஏற்றிவிட வேண்டியது உங்களின் பொறுப்பாகிறது. அது மட்டுமில்லாமல் உங்களின் கடமையும் ஆகிறது. பாடத்தில் சந்தேகம் கேட்கும் வரும் மாணவர்களின் சந்தேகம் தீர்க்காமல் சந்தோஷத்துக்கு பலி ஆக்கினால் அது யார் தவறு? அறியா பருவத்தில் அவர்களே தவறு செய்தாலும் நாமல்லவா வழிகாட்டியாய் இருக்கவேண்டும். அவர்களை நல்வழிப் படுத்தி அவர்களின் வாழ்வை செழிக்க செய்யவேண்டியது நம் கடமையல்லவா? வாழ்க்கையை கெடுப்பதுதான் நம் வேலையா என்ன? வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி? பாதுகாப்பும் போய் நம்பிக்கையும் போய் நடுத் தெருவில் நிற்கின்ற அவலம்தான் நேறுகிறது. எட்டு இல்லை பத்து வயது மூத்த ஆசிரியை அவர்களை விட இளைய ...அவர்களுடைய மாணவனை மயக்கி ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் கொடுமைகளும் அரங்கேறிகொண்டுதான் இருக்கிறது. சரி அப்படியே இருந்தாலும் கணவன் என்கிற மரியாதை எத்தனை நாளைக்கு இருக்கும்? உங்களால் கொடுக்க முடியும்?மூத்தவளாய் இருந்தாலும் குடித்து விட்டு வந்து அடித்து நொறுக்கினால் என்ன செய்ய முடியும்? வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? அப்படியென்ன மோகம்? உங்கள் வாழ்க்கையும் கெட்டு அந்த பிஞ்சு மாணவன் வாழ்கையையும் கெடுத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? சொல்வதை தப்பாய் எடுத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் என்றுதான் சொல்கிறேன்.'கூடா நட்பு' அதிகாரத்தில் அன்றே எழுதிவைத்து விட்டான் வள்ளுவன். " பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது" மாணவனை எப்படி நல்வழிப் படுத்துவது?மாணவன் கெட்டால்....ஆசிரியர் கெட்டால்....அது எங்கே போய் முடியும்? இல்லை எங்கே விடியும்? சமுதாயத்தின் மேல்தானே! அப்புறம் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தை...ஒழுக்கமான சமுதாயத்தை எதிர்பார்க்க முடியும்? இல்லை உருவாக்க முடியும்? எல்லாம் முடிந்த பின் விவாதம் செய்தோ... விசனப் பட்டோ...தண்டனை கொடுத்தோ...என்ன பயன்? சீரழிந்தது சீரழிந்ததுதான். சமுதாயத்தை சீர் செய்யவேண்டாம். அடலீஸ்ட்...சீரழிக்காமல் இருக்கலாமல்லவா? சிந்தியுங்கள்.
மேலும் தொடருவோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-Nov-22, 9:45 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 58

மேலே