ஏரி காத்தக் குறட்டை கோதண்ட ராமன்

முதலாளி: ஏன்யா, 170 கிமீ தூரத்தில் இருக்கும் பாண்டிச்சேரிக்கு ஒரு நாள் வேலையாப் போனவன் நாலு நாளு கழிச்சு திரும்பி வர்ர.

ஊழியர்: அது ஒண்ணுமில்ல சார், என் மனைவியின் ஊரும் பாண்டிச்சேரிதான். காரில் சென்னையைத் தாண்டி மதுராந்தகம் சென்றவுடன் அவள் அந்த ஊரில் உள்ள ஏரிகாத்த ராமர் கோவிலுக்கு போகணும்னு ஆசை பட்டா. ஆனால் போன வாரம் பெய்த பலத்த மழையால், ஏரியில் தண்ணீர் அளவு மிகவும் அதிகமாகி, ஏரியைத் தாண்டி வெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தது. இதனால் எரிக்காத ராமர் கோவிலும் தண்ணீரில் மூழ்கிவிட்டது. எனவே கோவிலுக்குச் செல்ல இயலவில்லை.

முதலாளி: அப்படி இருக்கும் பட்சத்தில் வண்டியைத்திருப்பிக்கொண்டு சென்னைத் திரும்ப வேண்டியதுதானே?

ஊழியர்: அப்படி இல்லை, சார். அங்கு உள்ளவர்களிடம் என் மனைவி "இவர் பெயர் கோதண்ட ராமன்" என்றபோது அவர்கள் என்னைப் பார்த்து "ராமன் ஐயா, சமயம் பார்த்து வந்தீங்க. இப்போ கோவிலே தண்ணீரில் மூழ்கி இருப்பதால், நீங்க தான் இன்று இரவு இந்த ஏரிக்கு பக்கத்தில் தங்கி, அன்று ராமர் காத்தது போல, இந்த ஏரி உடையாம பாத்துக்கணும்னு வற்புறுத்தி என்னை இழுத்துப் பிடித்துக் கொண்டுபோய் ஏரிக்கிட்ட இருக்கிற விருந்தினர் மாளிகையில் உட்கார வச்சுட்டாங்க.

முதலாளி: உன்னுடைய மனைவி அதுக்கு ஒண்ணும் சொல்லவில்லையா?

ஊழியர்: ஐயா, என் மனைவி சொன்னாள் "பரவாயில்லை, ஒரு நாள் இரவு தானே. ஏரிக்குப் பக்கத்தில் தான் தங்கிவிட்டுப் போங்களேன்" என்று. நான் அவளிடம் சொன்னேன் " ஒருவேளை ஏரியில் தண்ணீர் இன்னும் அதிகமாகி நான் அதில் மூழ்கிவிட்டால் நீ என்ன பண்ணுவே?". அதற்கு அவள் "ஒரு நாள் தானே, ஒண்ணும் குடிமுழுகாது" என்று பளிச்சென்று சொல்லிவிட்டாள்.
நான் "சரி, நீயும் எனக்குத் துணையா இரு" என்று சொன்ன போது, அவள் "இங்கு உள்ள ராமர் கோயில் அர்ச்சகர் தசரதரின் மனைவி கௌசல்யா, என்னுடைய காலேஜ் தோழி. அவளைப் பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டதால், நான் அவள் வீட்டில் தங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு, அவ்வளவு தண்ணீரிலும் என் காரை அவள் ஓட்டிக் கொண்டு போய்விட்டாள்.

முதலாளி: அடக் கடவுளே! அப்புறம் என்ன ஆச்சு?

ஊழியர்: அங்கு உள்ள நாலு பேர் சேர்ந்து எனக்கு ஆறிப்போன இட்லி நாலு, அதற்குத் தொட்டுக் கொள்ள நாலு வகைகள், வெறும் மிளகாய் மட்டுமே போட்ட தேங்காய் இல்லாத தேங்காய் சட்னி, சூடோ மணமோ இல்லாத வெங்காய சாம்பார், அதிகமாக புளித்துப் போன பச்சை தக்காளி சட்னி, கொத்தமல்லி போடாத கருகிப்போனக் கறிவேப்பிலை சட்னி வாங்கி கொடுத்து விட்டு, ஏரிக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் படகில் என்னை விட்டு விட்டு, அதே படகில் அவர்கள் போய்விட்டனர். அதில் எவனோ ஒருத்தன் "பொழச்சிக் கிடந்தா நாளை வந்து பாக்கறோம்" அப்படின்னு பயமுறுத்திட்டு போனான். நான் நினைத்தேன் " வேலை இல்லாத நாலு பேர் வந்தாங்க, வேலைக்கு உதவாத நாலு இட்லி தந்தாங்க. நாலுவித போணியாகாத சட்னிகளை திணித்துவிட்டு, என் உயிரை எடுக்காத குறையாகப்போனாங்க. நாளைக்கு இந்த நாலு பேர் வந்து என்னை எப்படி எடுத்துக்கொண்டு செல்வார்களோ?"

முதலாளி: அப்போ எப்படி இருந்தது உனக்கு?

ஊழியர்: என் பேரைக் ‘கோதண்டராமன்’ என்பதற்கு பதில் ‘தண்ட ராமன்’ என்று வைத்திருந்தால் ஓரளவுக்கு நான் தப்பித்துக்கொண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்று தோன்றியது .

முதலாளி: சொல்லறேன்னு தப்பா நினைக்காதே, உன் மனைவிதானே "உங்க பேரு கோதண்டராமன்" என்று சொல்லி உனக்கு அனாவசியமாக பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.

ஊழியர்: சார், உங்களுக்குத் தெரியுமா, என் மனைவி பேரு 'கைகேயி'.

முதலாளி: அப்படி பேர் இருந்தும் நீ ஏன் அவளைத் திருமணம் செய்துகொண்டாய்?

ஊழியர்: எல்லாம் விதிதான் சார். ஜாதகம் பார்த்தவரு "பத்துக்கு ஒன்பதரை பொருத்தம் இருக்கிறது" என்றார். நான் கேட்டேன் "அப்போ மீதி இருக்கிற அரை?". அவர் சொன்னார் "ஒண்ணும் பெருசா எதுவும் இல்ல, எங்கேயாவது எரிப்பக்கம் சென்றால் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அந்த மாதிரி இடத்துல இந்த பொண்ணு உன்னை போட்டுக்கொடுத்து விட கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது."

முதலாளி: அது தெரிஞ்சுமா நீ அவளுடன் எரிகிட்ட போனே?

ஊழியர்: நான் எங்கே சார் ஏரிக்கிட்டே போனேன், எதிர்பாராத வெள்ளத்தால், அந்த ஏரிதான் எங்ககிட்ட ஓடிவந்துவிட்டது.

முதலாளி: சரி அதை விடு, விருந்தினர் மாளிகையில் ஒண்ணும் பிரச்சினை இல்லாமல் தூங்கினாயா?

ஊழியர்: அந்த விருந்தினர் மாளிகையில் ஒரு வாட்ச்மன் கூட இல்லை. கீழே தண்ணீர் அதிகம் இருந்ததால், மாடிக்குச் சென்று தங்கினேன். ஆந்தை கூவுவது போல, நரி ஊளையிடுவதைப்போல, கோட்டான் பாட்டுப் பாடுவதைப்போல, என் மனைவி கர்நாடக இசை பாடுவதுபோல ஒரே பயமுறுத்தும் சத்தம் கேட்டவண்ணம் இருந்தது. ஏதோ ஒரு வழியாக அங்கே உள்ள ஒரு கட்டிலில் படுத்துக்கொண்டு "கீழே வந்த ஏரித் தண்ணீர் படியேறியோ அல்லது அங்கே உள்ள மர ஏணி மூலமாகவோ மாடிக்கு வந்துவிடக்கூடாது என்று அந்த ஏரியாவிலேயே இல்லாத 'ஏரி காத்த' ராமரை வேண்டிக்கொண்டேன்.

முதலாளி: கேட்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஒரு வாட்ச்மன் கூட இல்லாமல் ஒரு விருந்தினர் மாளிகையா?

ஊழியர்: சார், கேளுங்க இன்னொரு விஷயம். விடியற்காலை நாலுமணி வரை இந்தமாதிரி புதுப்புது சத்தங்களைக் கேட்டுக்கொண்டே இருந்ததினால் எனக்குப் பயம்தான் அதிகமாக இருந்ததே தவிர, தூக்கமே இல்லை. அதன் பிறகு ஒரு இரண்டு மணி நேரம் என்னையறியாமல் தூங்கிவிட்டேன்.

முதலாளி: இரண்டு மணி நேரம் தூங்கினாயே அதுவே பெரிய விஷயம். ஏரி உடைந்து வெள்ளம் மாடி மேல ஏரி வராமல் இருந்ததே பெரிய விஷயம். சரி, காலை எழுந்து காபிக்கு என்ன பண்ணினே?

ஊழியர்: இப்போ ஒரு கதை கேளுங்க. காலை ஆறுமணி அளவில் ஒரு சத்தம் கேட்டது "சார், பெட் காபி, சார் பெட் காபி" என்று. முதலில் அது ஒரு கனவு என்று நினைத்தவனுக்கு ஷாக் அடித்தமாதிரி இருந்தது. எனக்கு முன்னே ஒரு ஆளு, உண்மையான உடம்பு, தலையிலே முண்டாசுடன், வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, திருதிருவென்று விழித்துக்கொண்டு எனக்கு ஒரு டபராவில் காபியை கொடுத்தான்.

முதலாளி: அப்போ அவன்தான் வாட்ச்மானா?

ஊழியர்: ஆமாம் சார் , அவனேதான் அங்கு வாட்ச்மன், கேர்டேக்கர், குறட்டை இல்லை, இல்லை; குக் எல்லாமே.

முதலாளி: அப்படீன்னா அவன் இரவில் எங்கு இருந்தான், விருந்தினர் மாளிகையில் இல்லாமல்?

ஊழியர்: அது இன்னும் சுவாரசியமான விஷயம், சார். நான் இரவில் கேட்ட ஓநாய் சத்தம், நரியின் சத்தம், ஆந்தையின் சத்தம் எல்லாமே அந்த ஆல் இன் ஒன் ஆசாமியின் குறட்டைச் சத்தம் தான். அவன் பேரே 'குறட்டை குமரன்' தான்.

முதலாளி: என்னப்பா சொல்கிறாய், அந்த மாளிகையில்தான் யாருமே இல்லை என்று சொன்னாயே?

ஊழியர்: நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் நான் படுத்துக்கொண்டிருந்த கட்டிலின் கீழேதான், இந்த விஐபி, கம்பளி போர்த்திக்கொண்டு, என் கண்ணுக்குத்தெரியாமல் படுத்துக்கொண்டு, குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். அந்த சத்தத்தைத்தான் தான் நான் நரி, ஓநாய், ஆந்தை என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். காபி குடித்துவிட்டு அவனிடம் கேட்டேன் "பல வித ஓசைகளில் கேட்டதெல்லாம் நீ விட்ட குறட்டைதானா" . அவனும் ' ஆமாம், சார் என்றான்.
அப்போது அவனிடம் கேட்டேன் "ஏம்பா, எல்லோரும் ஒரே மாதிரியான சத்தத்துடன்தான் குறட்டை விடுவார்கள். நீ என்னடான்னா, பலவித ஜந்துக்களின் குரல்களில் குறட்டை விடுகிறாய் . பக்கத்தில் இருப்பவர்களுக்கு இரவில் பயமாக இருக்காதா?"
அவன் சொன்னான் "முன்னேயெல்லாம் நான் ஒரே மாதிரிதான் குறட்டை விட்டுக்கொண்டிருந்தேன். இந்த விருந்தினர் மாளிகைக்கு வந்து சேர்ந்த புதிதில், உங்களைப்போலவே ஒருவர் இங்கு வந்து தங்கியிருந்தார். அவர் கட்டில் மேலே படுத்துத் தூங்கினார். நான் கட்டிலுக்குக்கீழே தூங்கினேன். அவர் தூங்க ஆரம்பித்ததும் விதவிதமாக குறட்டைகள் விட ஆரம்பித்தார். சாதாரணமாக என் குரட்டைச்சத்தம் கேட்டால் பக்கத்தில் இருப்பவர்கள் தூங்கமாட்டார்கள் என்பது போய், அவர் விடும் பலகுரல் குறட்டைச் சத்தம் கேட்டு எனக்கே தூக்கம் வரவில்லை. சொல்லப்போனால் உங்களைப்போலவே நானும் கொஞ்சம் பயந்துபோய்விட்டேன். அடுத்த நாள் அவரிடம் சொன்னேன் அதைப்பற்றி. அவர் சொன்னார் "நான் செங்கல்பட்டில் ஒரு விருந்தினர் மாளிகைக்குப் போயிருந்தேன். அங்கே இரவில் கட்டிலில் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கியபோது, என் கட்டிலுக்கேகீழே படுத்து உறங்கிய வாட்சமான் பல தினுசாக குறட்டைகள் விட்டான். முதலில் கொஞ்சம் பயந்து போய் அவனை எழுப்பி கேட்டேன். அவன் சிரித்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டு பதில் பேசாமல் தூங்கிவிட்டான் ”.
“ மூன்று நாட்கள் அந்த இடத்தில உறங்கிய பிறகு, எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, நானும் அந்த வாட்சமனைப்போலவே குறட்டை விட ஆரம்பித்துவிட்டேன். அது எனக்கே தெரியவில்லை. அந்த வாட்ச்மான் தான் சொன்னான். பின்னர் வீட்டிலும் என் இந்த அல்ட்ரா மாடர்ன் குறட்டை சத்தத்தை கேட்டுவிட்டு, முதலில் பயந்து போய்விட்டனர். அதன் பின்னர் என் மனைவி வேறு அறையில் படுத்து உறங்கத்தொடங்கிவிட்டாள்.' குறட்டை விஷயம் அப்படிப்போகுது, சார்.

முதலாளி: ஐயோ, அய்யோ, ஆளை விடுப்பா. என் மனைவியும் குறட்டைவிடுபவள் தான். வீட்டில் நானும் கூட வேறு ஏஸீ அறையில்தான் தனியாகப் படுத்துக்கொள்கிறேன். இந்த குறட்டை விடுபவர்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. இவ்வளவு குறட்டையைப் பற்றிச் சொல்ற நீ குறட்டை விடுபவனா?

ஊழியர்: ஆமாம் சார், ஆஃபீசில கூட சிலநேரம் பக்கத்தில் இருப்பவர்கள் என்னை , ஏன்யா, குறட்டைவிடாமல் தூங்கமாட்டாயா என்று.

முதலாளி: இது ஆஃபீசா இல்லை கஸ்ட்அவுசா, தூக்கம் போவதற்கும், குறட்டை விடுவதற்கும்.

ஊழியர்: சார், ஆஹ்ன், ஆஹ்ன் , அது ஒண்ணுமில்லை. உணவு இடைவெளி நேரத்தில்தான் சார் நான் கொஞ்சமாக தூங்கும்போது நிறைய குறட்டை விடுவேன்.

முதலாளி: சரி, குறட்டை விஷயத்திற்கு வா

ஊழியர்: சார். என் மனைவி கூட வீட்டில் தனியாக வேறு ஒரு அறையில்தான் தூங்குவாள், என் குறட்டை சத்தத்திற்கு பயந்து. மதுராந்தகத்தில் அவள் என்னை சோகத்தின் ஏரியில் மூழ்க வைத்துவிட்டு, கௌசல்யா வீட்டிற்கு சென்றதுகூட அதனால்தான். சார், தப்பாக நினைக்காதீங்க, நீங்க தூங்கும்போது குறட்டை விடுவீர்களா?

முதலாளி: குறட்டை மன்னன் உன்னிடம் நான் எதற்கு மறைக்கணும். நான் ரொம்ப பெரிதாக குறட்டை விடுகிறேன் என்பதால், சின்னதாக குறட்டை விடும் என் மனைவிதான் என்னை " நீங்க போய் அந்த ஏசி அறையில் தனியாக படுத்துகோங்க" என்று சொல்லிவிட்டாள். இரவில் என்னுடன் இருப்பது என் மனைவி இல்லை, என் குறட்டைதான். சரி, சரி போய் வேலையைப்பாரு. அரட்டை அடிக்கும் ஆபீஸ் என்கிற பேர் மாறி இப்போ குறட்டை விடும் ஆபீஸ் என்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டீர்கள். உன்னை எதுக்கு கூப்பிட்டேன் என்றே தெரியவில்லை. சரி, போய் குறட்டை விடு, ஆஅஹ்ஹா ஆஹ்ஹ்ஹா, இல்லை அரட்டை அடிக்காம வேலையைப்பாரு. நாளைக்கு நீ பாண்டிச்சேரி போகணும், குறட்டை ஆர்டர், ஆன், இஇன்ஹின் இல்ல, ஒரு இரட்டை ஆர்டர் வாங்கி வர.

ஊழியர்: போறேன் சார், ஆனால் மதுராந்தகம் வழியாக இல்லை, ஈசிஆர் ரோடு வழியாக.

முதலாளி: உனக்கு எது ஈசியாக இருக்கோ அப்படியே பண்ணு. ஆனால் இந்தப் பெரியஆர்ட்டரை மாத்திரம் குறட்டை, யாஹஹா ஹ்ஹ்ஹம் , கோட்டை விட்டுடாதே.

ஊழியர்: நிச்சயமாகக் குறட்டை, ஆஹாஹா ம்ம்ம்ம், கோட்டை விடமாட்டேன், சார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Nov-22, 4:33 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 45

மேலே