கல கலன்னு சிரிப்பவளே கல்யாணம் எந்த மாசம்

ஆண்
கத்தாழங் காட்டுக்குள்ளே,
காடையிரண்டும் கூட்டுக்குள்ளே:
கன்னி நீ நிற்கையிலே,
காதல்போதை ஏறுதடி.
பெண்
கத்தி கத்தி கூவாதே,
காதல் போதையில் ஒளறாதே,
சுத்தி சுத்தி வாராமல் இருந்தாலே,
சுகம் தானா ஓடி வரும்.
ஆண்
பொத்தி பொத்தி வைத்தாளே
புதுபுடவையும் பழசாகுமடி.
பத்தியம் போதுமடி,
பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்க, வாடி புள்ள.

இளசு நீ இருக்க; எட்டிப்பார்க்க வந்தேனடி,
எலந்த காட்டுக்குள்ளே;
பெண்
புரியாதது மாதிரி நடிக்க வேண்டாம்
புத்தி கெட்டு திரிந்தது போதும்,
புதுசா வேறு கதைய கூறு,
புதுதினுசா இருக்கு உன்பேச்சி,
புரியும் வயசு வந்துடிச்சி
பொடி நடையை நடையை கட்டு;
ஆண்
உச்சி வெயிலு ஏறையிலே,
ஊசியா குத்தையிலே, உசுரக்காக்க வந்த உத்தமனடி,
உனக்கு ஏன் புரியலை.
பெண்
உசுர வாங்க வந்தவனே,
உரசிப்பார்க்க வந்தாயா !
கத்திரி வெயிலும் இல்லை,
கத்தரிக்காயும் இல்லை,
கத்தாமல் நீ இருந்தா,
காட்டுக்குள்ளே நான் நடப்பேன்.
கத்தியிருக்கையிலே,
கடத்தி செல்பவன் யாரு இருக்கா?
சுத்தி மரம் இருக்க,
சுடு வெயிலும் சுகம் கொடுக்கும்.
ஆட்டுக் கூட்டம் அண்டி இருக்க,
ஆசப்பட்டு வருபவன் யாரு?
எடச்சி என்று நீ நினைக்காதே,
எடுபய எவ வந்தாலும் ,
எட்டித் தான் நான் மிதிப்பேன்.
எங்க ஊரு சாமி இருக்க,
எதுக்கும் பயம் வேண்டாம்,
எட்டித்தான் வாயே நீயும்,
எட்டாத கனியை பறிக்க;
என்னை சுத்தி வந்தது போதும்.
ஆண்
எட்டத்தான் பார்க்கிறேன் புள்ள,
முட்டத்தான் நீ பார்க்கிறே புள்ள,
முழு மனசா ஏத்துக் கொள்ள,
மொறப்பு எதுக்கு புள்ள.
பெண்
வீராப்பா பேசும் மச்சன்
வௌரம் கெட்டு திரியாதே
வெரசா போய் சேரு
ஊர் வம்பு வந்து சேரும்
ஆண்
எட்டித்தான் பார்க்க வந்தேன்
எட்டு காத தூரம் தாண்டி நின்னா
எம் மனசும் நோவும்;
பெண்
எட்டித்தான் பார்த்தது போதும்,
எதுக்கு இந்த பவுசு,
மேச்சலுக்கு வந்த ஆடு;
மிடுக்காகத்தான் பார்க்குது பாரு.
பெண்
வச்ச கண்ணு போதும் சாமி,
வம்பு வந்து சேரும் தானே,
வயக்காட்டு நரியிது,
வழ வழன்னு பேசாது,
வந்த வழியே போய்சேரு.
ஆண்
வந்தது வலிதாபுள்ள,
வழ வழன்னு நீயிருக்க,
வழி மறைக்குது என் கண்ணு.
பெண்
வந்து தான் கையை வச்சிப்பாறே,
வயசுபடுத்தும் பாட்டத்தான் பாரு.

உடுத்திய சீலையாட்டம்,
ஒட்டியதுபோதும்,
உருப்பிடியா ஆட்டை மேச்சி,
ஊருபோயி சேரூ .
ஆண்
ஓரமாகத்தான் நான் போனேன்,
ஒதுங்கிப்போன என் ஆட்டை ,
ஓரங்கட்டியது ஓ ஆடுதான்,
ஓசையில்லாம மேயிதுபாரு;
ஒத்த ஒத்த ஜோடியாக, ஒரசி போகுது பாரு.
பெண்
ஒதுங்கி நீ நில்லு,
ஒட்டியது போதும்,
பாசத்தில் நீ வழுக்காதே;
பகல் கனவு காணாதே;
ஆண்
பகல்கனவு இல்லையிது,
பதுங்கி நீ பாயாதே;
கத்தாழச் செடிக்கும் கண்ணு உண்டு,
காட்டிக் கொடுக்கும்.
கட்டழகியே நீ வந்தால்,
கள்ளிச்செடி கூட காதல் மொழி பேசும்.
கல கலன்னு சிரிப்பவளே
கல்யாணம் எந்த மாசம்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (26-Nov-22, 8:51 pm)
பார்வை : 32

மேலே