தோல்வியெனும் தோழன்
தோல்வியெனும் தோழன்
======================
சரியானதற்குப் பிழையானதை
எழுதியவரே இப்போதுதான்
உமக்குச் சோதனைக் காலம்
பிழையானவர்களும்
சரியான கேள்வி கேட்கும்
சாதனைக் காலம்
சரியாய்த்தானே எழுதினேன்
பிழையானது ஏனென
மனம் கொதிக்கும் வேதனைக்காலம்
வெளியாகிய ஒரு பெறுபேறால்
முக்காலத்தைச் சந்தித்த
எதிர்காலச் சந்ததியே
இது நீ பள்ளியில் பயிலாத பாடம்
காலம் கற்றுத்தரும்
பாடங்களுக்கெல்லாம்
இதுவே அரிச்சுவடி
இப்பாடத்திற்குச் சோதனையோ
பெறுபேறோ இல்லை
இதுவே வாழ்வின் முதல் பாடம்
கேட்டோ கேளாமலோ கிடைக்கும்
அனுபவப் பாடம்
இந்த அனுபவப் பாடத்தை
அத்திவாரமாய்க் கொண்டு
நிதானத்துடன்
உன் அடுத்த அடியை எடுத்து வை
வெற்றிகளின் வாசலில்
உனக்காகவே காத்திருக்கும்
பாதணிகளே தோல்வி
அணிந்து செல்
இலக்கை அடை
இங்கே தோல்விகள் என்று
ஒன்றில்லை
அவை உன் தோழர்கள்
அரவணைத்துக் கொள்
எப்போதும் கூடவரா
வெற்றிகளிலும் பார்க்க
எப்போதும் கூடவே வரும்
தோல்விகளே உன்
அடுத்த இலக்கை நோக்கிய
பயணத்திற்கு வழியாகின்றன
வெற்றிகள் முற்றுப்புள்ளிகள்
தோல்விகளே அடுத்ததை
அறிவிக்கும் காற்புள்ளிகள்
தோல்விகளே
வெற்றிப் பாறையைச்
செதுக்கும் சிற்றுளிகள்
தோல்விகளில் கற்றதை
வெற்றியின் வித்தாக்கி
முயற்சி நீரூற்று
மகிழ்ச்சிப் பூக்கள்
உன் வாழ்வில் பூக்காமல் போகாது.
*
மெய்யன் நடராஜ்