கடிந்து கொண்டவள் கடவுளாகிறாள்

கடிந்து கொண்டவள் கடவுளாகிறாள்

விடியும்போது தன்னை காணாமல் தங்கமணி துடித்துத்தான் போவாள், என்ன செய்வது? இதை தவிர வேறு வழியில்லை. சரி மனைவி தங்கமணிதான் துடித்து போவாளா? தன்னை நம்பி உட்கார்ந்திருக்கும் பெற்ற அம்மாள் என்ன நினைப்பாள். அட.குழந்தைகள், ஓரளவுக்கு விவரம் வந்த குழந்தைகள் அவர்கள் என்ன நினைப்பார்கள்? உயிரோடிருக்கிறானா? இல்லை ஓடி போய்விட்டானா?
ஒரு பிரச்சினை என்று வரும்போது ஓடிப்போகும் கணவனை அல்லது மகனை எந்த தாய்தான் விரும்புவாள், வளரும் குழந்தைகள் என்ன நினைக்கும்? இருந்தாலும் அவமானத்தை அனுபவிப்பன் நான் தானே..!
இப்படி பல சிந்தனைகள் மனதுக்குள் ஓடி கொண்டிருந்தாலும் நான் இதை தவிர என்ன செய்ய முடியும்? நாளைக்கு என் வீட்டுக்குள்ள புகுந்து சட்டையை பிடித்து வட்டியோட கடனை அடைச்சுட்டு மறு வழி பாரு அப்படீன்னு பைனான்ஸ் பரமசிவம் நிற்கும்போது எந்த முகத்தை வச்சுட்டு இவங்களை பார்க்க முடியும்?
தினசரி காய்கறி வியாபாரம். பரமசிவத்துகிட்டு வட்டிக்கு வாங்கி தின வட்டி போட்டு திருப்பி கொடுக்கறது, ஒரு வாரமா தவணை நின்னு போச்சு, அவன் பெரிய ரவுடி, நாளைக்கு காலையில உன் வூட்டுக்குள்ள புகுந்து..இப்படி சொல்லி மிரட்டியிருந்தான்
இப்படி தலையில் பல யோசனைகள் வந்து மோத, நடு இரவு தாண்டிய வேளையில் வேக வேகமாக நடந்து போய் கொண்டிருந்தான் அருணாசலம். எங்கே போகிறோம் என்பது புரியாமல்தான் நடந்து கொண்டிருந்தான். சட்டென அந்த யோசனை வந்தது, இரயில்வே ஸ்டேசனுக்கு போய் விடலாம். அங்க நிக்கற ஏதோவொரு டிரெயின் ஏறி கிளம்பிடலாம்.
இன்னும் ஒரு கிலோ மீட்டர் போனால் இரயில்வே ஸ்டேசன் போய் விடலாம், அந்த இருளில் பாதையோரத்தில் பெரும்பாலான கடைகள் அடைபட்டு உறங்கி கிடக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாய் “பேக்கரிகள்” மட்டும் திறந்திருந்தன. “ஈவங்களுக்கு மட்டும் எப்படியோ வியாபாரம் ஆயிடுது” மனதுக்குள் முணுமுணுத்து கொண்டான். என்றாலும் அவைகள் கூட தூங்கி வழிந்தபடித்தான் இருந்தது.
வலது புறம் ஒரு குறுக்கு பாதை திரும்பியது. “அட” இது வழியா இரயில்வே ஸ்டேசனுக்கு, சீக்கிரம் போய் விடலாமில்லை நினைத்தபடியே அந்த திருப்பத்தில் திரும்பியவன் ஒரு கனம் தயங்கி நின்று விட்டான். காரணம் அந்த பாதை முழுக்க கும்மிருட்டாக இருந்தது. இந்த இருட்டில் இந்த பாதை வழியாக போவது பாதுகாப்புத்தானா?
சட்டென இவனுக்கே சிரிப்பு வந்து விட்டது. நாமே கடன்காரனுக்கு பயந்து இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நமக்கு உயிர் பயம் எப்படி வருகிறது?
பத்தடி தூரம்தான் நடந்திருப்பான், மல்லிகைப்பூ வாசம் மூக்கின் சுவாசத்தில் ஏறியது. ஐயோ இங்க பேய் நடமாட்டம் இருக்குமோ? திரும்பி விடலாமா? திரும்ப நினைத்து திரும்பியவன் யார் மீதோ மோதிக்கொள்ள “ஐயோ பேய்” வாய் விட்டே கத்தி விட்டான்.
‘யோவ்’ பேயும் இல்லை பிசாசும் இல்லை, நல்லா பாரு அந்த பெண் தன் கையை கீழே காண்பித்து காலை காட்டினாள். தெரியுதா ? பேயா இருந்தா காலு இருக்காதுன்னு தெரியுமா?
“அப்படியா” என்பது போல விழித்தவன் ஆமா நீங்க யாரு?
யோவ் முதல்ல நீ எதுக்கு வந்திருக்கேன்னு எனக்கு தெரியும், சும்மா நடிக்காதே, வா கொஞ்ச தூரம் தள்ளித்தான் என் குடிசை இருக்கு.
இவள் எதற்கு குடிசைக்கு கூப்பிடுகிறாள்? ஒரு நிமிசம் புரியாமல் பார்த்தவனுக்கு சட்டென நண்பர்கள் பேசி கொண்டது ஞாபகத்திற்கு வந்தது.” அடேடே இந்த இடம்” விவகாரமான இடமாச்சே..!
‘போம்மா” நீயும் உன் குடிசையும்” வேகமாக சொல்லியபடி அந்த இடத்தை விட்டு ஓடுவதற்கு முயற்சி செய்யும்போது…
ஒரு வண்டியின் ஹெட்லைட் வெளிச்சம் இவர்கள் இருவர் மீது விழ அந்த வெளிச்சம் கண்ணை கூச, தலையை கவிழ்த்து நின்றான். பக்கத்தில் நின்றிருந்த பெண் அதற்குள் அங்கிருந்து ஓடுவதற்கு முயற்சிக்க..
திடு திடுவென இரண்டு போலீஸ்காரர்கள், ஓடி வந்து “இந்தா நில்லு நில்லு”
போலீஸ் ஸ்டேசன், அருணாச்சலம் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சி கொண்டிருந்தான், சார் நம்புங்க சார், நான் அந்த மாதிரி ஆள் கிடையாது சார், ரொம்ப கெளரவமான குடும்பம்.
அதுதான் பார்த்தனே, குடும்ப கெளரவத்தை “அந்த இருட்டுக்குள்ளே” இன்ஸ்பெக்டரின் நமட்டலான சிரிப்பு
ஐயோ சார் நான் இரயில்வே ஸ்டேசனுக்கு அந்த வழியா போனா சீக்கிரமா போயிடலாமுன்னு போனேன் சார், இடையில அந்த பொண்ணு நின்னுகிட்டிருந்திருக்கு சார், மத்தபடி எனக்கு ஒண்ணும் தெரியாது சார், வேணுமின்னா அந்த பொண்ணு கிட்டயே விசாரிச்சு பாருங்க சார், கெஞ்சினான்.
இன்னேரத்துக்கு எதுக்குய்யா இரயில்வே ஸ்டேசனுக்கு போகணும்? அடுத்த கேள்வி இன்ஸ்பெக்டரிடம் இருந்து வர..!
சார்..” வேறு வழியில்லாமல்” இன்ஸ்பெக்டரிடம் எல்லா உண்மைகளையும் சொன்னான், சார் நாளைக்கு காலையில அவன் என் மானத்தை வாங்கிடுவான்னு பயந்து இராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டே எங்கேயோ கண் காணாத ஊருக்கு போயிடலாமுன்னு வீட்டுல சொல்லாம கொள்ளாம இரயில்வே ஸ்டேசனுக்கு போனேன் சார். வழியில் இந்த குறுக்கு சந்து வழியா போனா சீக்கிரம் போயிடலாமுன்னு நினைச்சு அதுக்குள்ள நுழைஞ்சிட்டேன் சார், அப்பத்தான் அந்த பொண்ணு அங்க இருந்திருக்கு..
அவன் சொல்லிக்கொண்டிருப்பதை காது கொடுத்து கேட்பது போல இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந்தாலும் நம்பாதவர் போல் அவன் முகத்தையே நோட்டம் இட்டு கொண்டிருந்தார்.
அந்த பெண்ணுக்கு இதுவெல்லாம் அனுபவம் போலிருக்கிறது, அதனால் இதைபற்றி எந்த கவலையில்லாமல் சற்று தள்ளி போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந் தாள்.
விடிந்து போயிருந்தது, இவன் போலீஸ் ஸ்டேசனை விட்டு வெளியே வரும்பொழுது.
இவன் என்ன சொல்லியும் இன்ஸ்பெக்டர் நம்பவில்லை. அவனை ஸ்டேசனிலேயே உட்காரவைத்து, சற்று முன்தான் சரி சரி போ ஒழுங்கு மரியாதையா வீடு போய் சேர், பார்த்தா ஒழுங்கானவனா தெரியறே, உனக்கெதுக்கு இந்த புத்தி..! இந்த நிகழ்ச்சிக்காக சொன்னாரா? இல்லை தான் ஊரை விட்டு ஓடிப்போக முயற்சித்ததை சொன்னாரா? தெரியவில்லை, என்றாலும் போலீஸ் ஸ்டேசனை விட்டு வெளியே வரும்பொழுது அந்த பெண்ணை மனதுக்குள் கண்டபடி திட்டிக்கொண்டு வந்தான்.
“பாவி” பாவி என் பேரையும், குடும்பத்தையும் நாறடிக்க பார்த்தாளே, இவன் செய்ய நினைத்த காரியத்தை வசதியாக மறந்து விட்டு ஏதோ அந்த பெண்ணால்தான் இவன் கெளரவம் தொலைந்து போயிருக்கும் என்பது போல ‘அவளை’ சபித்தபடி வீட்டை நோக்கி வேகமாக நடந்தான்.
இவன் சற்று தூரத்தில் வரும்போதே கவனித்து விட்டான், தன் மனைவி,அம்மா, மற்றும் அக்கம் பக்கத்து ஆட்கள் கொஞ்சம் பேர் நின்று கொண்டிருப்பதை. அட கடவுளே எங்கே போனாய்? கேட்டால் என்ன பதில் சொல்வது.
இவன் அருகே வர மனைவி தங்கமணி ஓடி வந்தாள். என்ன ஆச்சுயா? அந்த பரமசிவம் புழைச்சுகிட்டாரா? பதட்டத்துடன் கேட்க..!
இதென்ன பரமசிவத்தை இவள் கேட்கிறாள்.! புரியாமல் மனைவியை பார்த்தான். என்ன ஆச்சுன்னு சொல்லேன், நாலு மணிக்கு பால் வாங்க வந்த ஆளு நெஞ்சு வலின்னு சொல்லிட்டு வந்து அங்கேயே மயங்கி விழுந்துட்டாருன்னு, நம்ம பக்கத்துல இருந்து பால் வாங்க போன மணி அண்ணன் சொன்னாரு. உன்கிட்டே சொல்லலாமுன்னு பார்த்தா வீட்டுல காணோம், சரி நீயும் விசயம் தெரிஞ்சு அங்க ஓடி போயிருப்பியோன்னு காத்துகிட்டிருக்கோம். நீ என்னடான்னா ஒண்ணும் பேசாம முழிச்சுகிட்டு நிக்கறே..!
மனைவி சொன்னதில் “பரமசிவத்துக்கு நெஞ்சு வழி, மயங்கி போய் விட்டார்” இது மட்டும் அவன் காதில் தெளிவாக விழுந்தது.
கடவுளே என்னை காப்பாத்திட்டே, நல்ல வேளை அவசரப்பட்டு ஊரை விட்டு போயிருந்தா..! இப்படி நினைத்தவன் சட்டென அந்த பெண்தான் ஞாபகத்திற்கு வந்தாள். தன்னை தடுத்து ஸ்டேசனில் கொண்டு போய் உட்காரவைத்தவள். கடவுளா வந்தார்? அவ ரூபத்துல கடவுள் இப்படி வந்திருப்பாரு, சமாதானமாய் சொல்லிக்கொண்டாலும் தற்சமயம் மனதில் அந்த பெண்ணை கடவுளாக்கி இருந்தான்.
வீட்டை விட்டு பொறுமையாகத்தான் கிளம்பினான் பரமசிவத்தை பார்க்க, மனைவி மட்டும் அடிக்கடி கேட்டு கொண்டிருந்தாள் ஆமா அன்னைக்கு அந்நேரத்து எங்க போயிருந்தே?
மூச்…வாயே திறக்கவில்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Dec-22, 10:07 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 97

மேலே