மாடங்களில் மாதர்கள் காட்சி - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

வாளரம் பொருத வேலும், மன்மதன் சிலையும் வண்டின்
கேளொடு கிடந்த நீலச் சுருளு(ம்)செங் கிடையும் கொண்டு
நீளிருங் களங்கம் நீக்கி நிரைமணி மாட நெற்றிச்
சாளரம் தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்!

14 மிதிலைக் காட்சிப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்

பொருளுரை:

அரம் என்னும் வாள் வகையால் அராவிய வேலும், காமதேவனது வில்லும், வண்டுகளின் இனத்தோடு பொருந்திய நீல மணிச்சுருளும், சிவந்த நெட்டி என்னும் சடையையும் (தன்னிடத்தே) கொண்டு நீண்ட காலம் தம்மிடம் தங்கியிருந்த பெரிய களங்கத்தைப் போக்கி இரத்தினங்கள் பதித்த வரிசையாக உள்ள மாட மாளிகைகளின் மேலிடத்தில் உள்ள பலகணி வாயில்கள் தோறும் காணப்படுகின்ற முழுச் சந்திரர்களின் உதயத்தைப் பார்த்தார்கள்.

சாளரப் பெண்கள்:

வீதியில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக உப்பரிகையின் மேல் சாளரங்கள் தோறும் பெண்கள் நிற்கின்றார்கள்; அவர்களின் முகத்தோற்றத்தைக் கண்ட காட்சியே இங்குச் சித்தரிக்கப் பெற்றுள்ளது.

இப்பாடல் உருவக உயர்வு நவிற்சியணி ஆகும்;

மதியும், பெண்களின் முகமதியும்:

வான்மதி; வானத்தில் காணக்கூடிய மதி ஒன்று; பகலில் ஒளி மழுங்கக் கூடியது; களங்கம் உள்ளது;
பெண்மதிகள்: பகலில் ஒளி மழுங்காது; களங்க மற்ற நிலை; பல சந்திரர்கள் (முகங்கள்) உதயமாதல்.

உவமை:

வேல் - கண்களுக்கு; சிலை - புருவத்துக்கு; வண்டோடு கிடந்த நீலச்சுருள் - கூந்தலுக்கு;
செங்கிடை (அதரம்) - உதட்டுக்கு; சந்திரன் - பெண்களின் முகங்களுக்கு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Dec-22, 3:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே