562 எட்டா வெளியாய் இன்பமாய் இலங்குவோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 20
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
முத்தர்பே ரின்ப வாழ்வை
..மொழிமனக் ககோச ரத்தைப்
பத்தர்பாக் கியத்தைப் பாவப்
..பகையினைத் தகையின் வைப்பை
வித்தக வொளியை யின்ப
..விளைவினை யருட்பௌ வத்தை
உத்தம குணாக ரத்தை
..யுளங்கொளார் வளங்கொ ளாரால். 20
– தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
அவாவறுத்த முனிவர்களுக்கு அழியாப் பேரின்ப வாழ்வு கடவுள். மனங் கழிய நின்ற மறைபொருள் கடவுள்.
பேரன்பினராகிய பக்தர்களின் பேரும் பேறு கடவுள். மீளா நிரயத்துக்கும் அதன் வழி வாளாப் பிறப்புக்கும் ஆளாக்கும் பாவப் பகைவன் கடவுள்.
அளவிலா அழகின் நிலையம் கடவுள். செயற்கரும் செயல் செய்யும் சீரியோர் உள்ஒளி கடவுள். தெவிட்டா இன்பச் செல்வன் கடவுள். பேரருட் பெருங்கடல் கடவுள்.
எல்லாச் சிறந்த பண்புகளின் உறைவிடம் கடவுள். இத்தகைய நன்மை வாய்ந்த கடவுளை நாளும் உளங்கொண்டு வழுத்தாதார் சிறப்பும் செல்வமுமாகிய வளம்பெற்று வாழார்.
முத்தர் - முனிவர். அகோசரம் - எட்டாதது. பாக்கியம் - பெரும்பேறு. தகை - அழகு. வித்தகம் - அருஞ்செயல். பௌவம் - கடல். குணாகரம் - பண்பின் உறைவிடம்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
