318 உறுப்பு உடல் அழகெல்லாம் எலும்புமாய் ஒழியும் - அழகால் செருக்கல் 2

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

தோல்வாசம் துறந்திறந்து கிடந்தவழ கியைக்காணச்
..சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள்ளென்பின் குவையொன்றே கண்டனஞ்செங்
..குமுத வாயும்
நூல்போன்ற இடையுமன நடையுமணி தனமுமதி
..நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும்பான் மொழியுங்கா ணாமலுளந்
..திகைத்தோ மன்னோ 2

- அழகால் செருக்கல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வெளித் தோலின் அழகும் மணமும் நீங்கி இறந்து கிடந்த அழகி எனப்பட்ட பெண்ணைக் காண்பதற்காகச் சுடுகாட்டுக்குச் சென்றோம். கம்பு போன்ற வெண்மையான எலும்பின் குவியலைக் கண்டோம்.

செவ்விய குமுத மலரையொத்த வாயும், நூலினை ஒத்த மெல்லிய இடையும், அன்னம் போன்ற நடையும் அழகிய கொங்கைகளும், நிலவு போன்ற நெற்றியும் கெண்டை மீனை யொத்த கண்களும், தீம்பாலை யொத்த இனிய மொழியும் காணாமல் உள்ளம் திகைத்தோம் ஐயோ!” என்கிறார் இப்பாடலாசிரியர்.

சுடலை - சுடுகாடு. திகைப்பு - மயக்கம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-22, 11:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே