333 சாரினும் கீழான குணமுடையோர் தம்நிலை மாறார் - தீயரைச் சேராமை 2
கலி விருத்தம்
(கருவிளம் கருவிளம் கருவிளம் புளிமா)
கரிநிற முறும்வெளி றுடைகரி யணுகின்
சொரிகரி கலையுறு சுசியினை யுறுமோ
பெரியவர் குணநிலை பெறலரி தறமே
யிரிகல ரொடுகல வறவுறும் இழிபே. 2
- தீயரைச் சேராமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”வெண்மையான ஆடை கரியை நெருங்கினால் தன்னிறம் மாறிக் கருமையாகி விடும். ஆனால் சிந்தும் கரி அந்த ஆடையைச் சார்ந்ததனால் தன் கருமை மாறி வெண்மை ஆகுமா? ஆகாது!
அதுபோல், கீழான குணமுடையவர்கள் மேலோரைச் சேர்ந்தாலும் அவரது மேன்மையான தன்மையை அடைவது மிக அரிது.
ஆனால் மேலோர் கெடுமதியுடைய கீழோரைச் சேர்ந்தால் இழிவினை எய்துவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
சொரி – சிந்து, சுசி - வெள்ளை. இரி - கெடு.
கலர் - கீழோர்.