பரிதவிக்கும் மனம்
பரிதவிக்கும் மனம்....
நீரிலிட்ட உப்பாய் கரைந்தது வெள்ளி
நிர்மூலமாய் வெறித்த வெண்சாம்பல் படலமாய் வானம்
நித்திரையிலிருந்து விழித்தும் விழிக்காமலும் பூமி
நிசப்தத்தின் நடுவே நீண்ட ஒரு ஒற்றைக் குரல்
அடிவயிற்றிலிருந்து புரப்பட்ட ஆழ்மன சோகம் தாங்கி
மௌனக் காற்றை அதிரவைத்து
மரண பயத்தை உதிர்த்தது.....
எங்கிருந்து வந்தது...?
ஏன் என் இதயத்தை கனக்க வைத்தது...?
அது மனித இனக் குரலே அல்ல...
மரணத்தின் கோரப்பசிக்கு
தன் துணைப் பெண்டை பறிகொடுத்த
ஆண்பறவை பாடிய முகாரியின் ஓலமிது...
அடைகாத்துக் கிடந்த முட்டைகள் அங்கே
அனாதையாய் ஜனனக் கதவை முட்டிக் கொண்டிருக்க
மண்டிய அவலத்தின் ஆற்றாமையில்
துக்கம் இழைந்தோடியக் குரலில்
இடைவிடாத ஒரு தேடலின் தாக்கமாய்
அபயம் வேண்டிப் புலம்பியது அக்குரல்...
அமைதியிழந்து ஆர்ப்பரித்த என்மனம்
ஆறுதல் சொல்ல வழியின்றி பரிதவிக்கிறது....
கவிதாயினி அமுதா பொற்கொடி