அதுவன்றோ விண்டற்கு விண்டல் மருந்து - பழமொழி நானூறு 251
இன்னிசை வெண்பா
கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ மாற்றி விடுதல் அதுவன்றோ
விண்டற்கு விண்டல் மருந்து. 251
- பழமொழி நானூறு
பொருளுரை:
(முன்னரே அறிந்து வைத்தும்) இப்பொழுதுதான் கண்டு அறிவார் போலாராகி, நட்பு இன்மையை உண்டாக்குவாரைத் தாமும் முன்னரே அறிவார் போன்று இல்லாது, அவர் நட்பின்மையை உண்டாக்கியது போல,
அவரின் பிரிந்து நீங்கி நட்பினை மாற்றி விடுகின்ற அச்செய்கை தன்னிடத்துப் பூண்ட அன்பினை நீக்கியதனுக்குத் தானும் அதுநீக்குதல் மருந்தாமாறு போலாகுமல்லவா!
கருத்து:
தம்மை நன்றாக அறிந்திருந்தும் அறியாதார் போன்று நடிப்பார் நட்பு விடுதற்குரியதாகும்.
விளக்கம்:
முன்னரே அறிந்திருந்தும் அறிந்தார் போலக் கூறின், அவர்களுற்ற இன்னலை நீக்கவேண்டிய நிலைமை ஏற்படுமாதலால், அறியார் போலக் காட்டுவர்.
இத்தகையோரிடத்தில் நாம் முன்னரே நன்றாக அறிந்ததாகக் கூறினும் அவராற் பயன் பெறுதல் இல்லை. ஆதலால், அவரைப்போல நாமும் நட்பினை விடுதலே நன்றென்பதாம்.
கெழீஇ இன்மை - பொருந்துதல் இன்மை (அஃதாவது) நட்பின்மை. ஒருவி - ஒரீஇ எனவந்தது விகாரம்.
'விண்டற்கு விண்டல் மருந்து' என்பது பழமொழி.