என் பிடித்தங்களுடன்
என் பிடித்தங்களுடன்.
----------------------------------------
அழுந்தச் சொல்வதற்கு எதுவும் இருந்ததில்லை
சுற்றி எல்லாமே இருக்கின்றன
ஓர் அஃறிணையின் உணர்வுபோல்
இதோ
என் உள்ளங்கைகளை
இறுக மூடிக் கொள்கிறேன்.
என் பிடித்தங்களுடன்
ஒருநாள்
இப்படியே இறந்துவிடப் போகிறேன்
இறுகிய விரல்முடிச்சுகளை
யாரும்
அவிழ்த்துவிடவேண்டாம்.
சாலையில் நடந்துபோகிறபோது
உடன் வந்தவர்களை
சற்று முன்னால் போக அனுமதித்துவிட்டு
இதோ வந்துவிடுவிறேன்
என்கிறவள்
வழிதோறும் புலப்படும்
இரசிக்கும்படி யானவைகளிடமெல்லாம்
குரல்வளையின்
கனம் இறக்கிக் கொண்டிருப்பாள்
என்னம்மா Dress Sence இது
என்று பிள்ளைகள் கேட்கிறபோதும்
என்னதான் தெரியுமென்று
சொந்தமும் சுற்றமும்
அறிவு சாட்டைப் பின்னுகிறபோதும்
அசடுபோல்
எளியதாயொருப் புன்னகைப் புரிகையில்
அவர்களின் பார்வை இருப்பு
ஏளனம் சொல்லத்தான் செய்துவிடுகிறது.
விழித்துளிகளின் பொறுமையிடம்
தோற்கமுடியாமல்
பின் தள்ளித் தாழிட்டுக்கொள்கின்றன
சொல்லநினைக்கும் வார்த்தைகள் .
அவள் தெரிந்ததாய்ச் சொல்லும்
வார்த்தைகளுக்கு
என்றுதான்
யாரிடம் தான் மதிப்பிருந்தது ?
இத்தனைக்கும் பின்னாலிருந்து
செலவுகளின் பட்டியல்
தொகுக்கும்பொழுதெல்லாம்
விழிப்படர்த் திரையில்
வந்து வந்து மறையும்
பிள்ளைகளின் பிடித்தங்கள்
மண்டியிட்டுக் கெஞ்சும்
அவர்களுக்காய் இன்னும் கொஞ்சமென..
நப்பாசையில்
இன்றாவது இருப்பேனோ
என நினைத்து
என்னபிடிக்குமென்றால்
அவர்கள்
விரலெண்ணி வரிசைப்படுத்திச்சொல்லும் எதிலும்
இவள் இருப்பதில்லை.
இனியும் இருக்கப்போவதில்லை.
உடல் பொருள் ஆவியென
மென்னுணர்வுகளைத் தாங்கும்
இருளுடைய கட்டிலின் பங்கு
இவர்கள் மனதில்
சற்றேனும் இருந்திருக்கலாம்தானே
இவள் கனவுகளுக்குள்
நித்தம் இவர்கள் வந்துபோனதைப் போல
இவர்கள் கனவுகளிலாவது
இவளைக் கண்டிருக்கலாம்தானே ம்
இறந்த பின்னால்
ஒருவேளை
காற்றில் கலந்திருக்கக்கூடும்
இவளின் பிடித்தவைகள்.
உற்றத் தோழிகள்
யாரிடமேனும்
அவிழ்த்துவைத்துப் போயிருக்கலாம்
இவள் பிடித்தவைகளை
ஒரு பைத்தியம் போல்
மாறாத
அசடுவழியும் எளிய புன்னகையோடு.
இறந்தபின்னாலாவது தேடுவீர்கள்தானே
இவளால் சொல்லப்படாத ,
இல்லை யாரிடமேனும் சொல்லிவிட்டுப்போன,
காற்றிலே
தொகைந்துவிட்ட என
இவள் பிடித்தமானவைகளை,
இவள்
என்ன சொல்ல நினைத்தாளோ.?
உயிரோடு இருந்தவரை சிருமிக்கொண்டிருந்த
இவள் அபிலாசைகள்தான்
என்னவாக இருந்திருக்குமோ.?
இவள் உணர்வின் மொழிதான் என்னவோ?
மொழியின் வடிவம்தான் என்னவோ?
ஒற்றைப் பிலாக்கணம்
தொகைந்த எளியப்புன்னகையின் ஒலியோடு
உங்கள் செவி அறுத்துக் கொண்டிருக்கும்..
இடுகாட்டின்
ஏதோ ஒரு வழிநெடுகில்
தலைப்பிடித்துக் கதறத் தோன்றும் அன்று.
எங்கிருக்கிறாய் ?
ஏன் விட்டுச் சென்றாய்? என ..
பைராகி