145 அன்புடையர் பொருளும் சுற்றமும் காக்க வேண்டும் - கணவன் மனைவியர் இயல்பு 37

தரவு கொச்சகக் கலிப்பா

வேதனன்ப ரவற்குரிய விமானமுதல் யாவையுமிக்(கு)
ஆதரமோ டோம்புவரா(ல்) ஆர்வலன்பா லன்புடைய
மாதரவ னனைதந்தை தமர்மாட்டும் அன்புறுவார்
காதலியின் தமரிடத்துக் கணவனுமத் தன்மையனால். 37

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கடவுளடியார் இறைவனுடைய திருக்கோவில் முதலிய பொருள்கள் எல்லாவற்றையும் மிகுந்த பேரன்புடன் பாதுகாப்பர்.

அதுபோல், கணவனிடம் அன்புடைய பெண்கள் அவனின் தாய், தந்தை உறவினரிடத்தும் அன்பு செலுத்துவார்கள். மனைவியின் உறவினரிடம் கணவனும் அதே போன்று அன்புடன் பாதுகாக்கும் தன்மை உடையவனாய் இருப்பான்” என்று அன்புடையவரின் பொருளும், சுற்றமும் தமதே போலக் காக்க வேண்டும் என இப்பாடலாசிரியர் இருவர்க்கும் தெரிவிக்கிறார்.

வேதன் - கடவுள். விமானம் - திருக்கோவில். ஆர்வலன் - அன்புடையவன்; கணவன்.
காதலி - மனைவி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 10:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே