146 பயிலுமிடம் நோக்கிப் பரிவாள் தலைவி - கணவன் மனைவியர் இயல்பு 38

தரவு கொச்சகக் கலிப்பா

போனவர்தா மிருக்குமிடம் புசிக்குமிடம் துயிலுமிடம்
மானனையாள் நோக்குபுநோக் குபுவருந்தும் வல்லேகென்(று)
ஈனமில்நா ளைத்தொழுமன் ஏகும்வ ழிபார்த்தழுமால்
மானவர்சென் றொருதினமே மறுதினம்போம் வகையெவனால். 38

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பொருள் தேடச் சென்ற தனது தலைவர் வழக்கமாகத் தங்குமிடம், உண்ணுமிடம், உறங்குமிடம் முதலியவற்றைப் பார்த்துப் பார்த்து வருந்தும் மான் போன்ற மருண்ட தன்மையுள்ள தலைவி, விரைவாகச் சென்றுவிடு என்று குற்றமற்ற பகற்பொழுதைக் கைகூப்பித் தொழுது, தலைவர் பிரிந்து சென்ற வழியை நோக்கி அழுகின்றாள்.

என் தலைவர் சென்று இன்று ஒரு நாள்தானே ஆகிறது! இன்னொரு தினமாகிய நாளை தலைவனின்றி எங்ஙனம் கழியும்?” என்று தலைவி மருகுவதாக இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.

நோக்குபு - பார்த்து. வல் - விரைவாக.
ஈனமில் - குற்றமற்ற. நாள் - பகல்.
மானவர் - தலைவர். எவன் - எங்ஙனம் கழியும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 10:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

சிறந்த கட்டுரைகள்

மேலே