பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும் இருந்தமையா ராகி இறப்ப வெகுடல் - பழமொழி நானூறு 281

இன்னிசை வெண்பா

பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு. 281

- பழமொழி நானூறு

பொருளுரை:

பரந்து பட்டு அருவிகள் இழிதரும் மலை நாடனே!

தம்மொடு பொருந்தாதவர்களைப் போரிட்டு வென்றவிடத்தும் சோம்பி இருத்தலைச் செய்யாராகி அவர் உயிர் இழக்கும்படி வெகுண்டு நிற்றலாகிய அச்செயல் தலையரிந்து வைத்த நெல்லரிதாளை உடனே உழுது அழுகுமாறு நீர் பாய்ச்சுதலோடு ஒக்கும்.

கருத்து:

அரசர் தம் பகைவரை வென்றதோடு அமையாது வேரறக் களைதல் நல்லது.

விளக்கம்:

அரிந்தவுடனே நீர்புகப் பெய்து அழுக வைத்தல் நிலத்திற்கு உரஞ் செய்தலாயமைதல் போல, பகைவரை வென்றதோடமையாது அவர் இறுதி பெறச் செய்தல் தனக்கு உரஞ் செய்தலாகும்.

'அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-23, 8:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே