ஒருங்கொவ்வா நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது – நாலடியார் 387

நேரிசை வெண்பா

கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்(று)
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன்; - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடா(து)
என்னையுந் தோய வரும் 387

- கற்புடை மகளிர், நாலடியார்

பொருளுரை:

மருதநிலத்து ஊரில் இருந்து கொண்டே அவ்வூரான் ஒருவன் தாழ்ந்த கருங்கொள்ளையும் உயர்ந்த செங்கொள்ளையும் ஒரேவிலைக்குத் தூணிப்பதக்கு என்று ஒரே அளவாக ஒன்றாய் வாங்கினானாம்;

அதுபோலப் பெண்மை இயல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நல்ல நெற்றியையுடைய பரத்தையரை மருவிய மலை போலும் பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடுதலுஞ் செய்யாது என்னையும் மருவ வருகின்றனன். (ஈதென்னமுறை)

கருத்து:

கற்புடை மகளிர் தூயர்.

விளக்கம்:

தூணி யென்பது நான்கு மரக்காலும் பதக்கென்பது இரண்டு மரக்காலுமாய்த் தூணிப் பதக்கென்பது ஆறு மரக்கால் அளவை யுணர்த்திற்று;

ஆம் என்பது இகழ்வின் மேற்று; உருவில் மட்டும் ஒத்து அழகியராய் உள்ளத்தால் ஒவ்வாரான பரத்தையரென்றற்கு ‘நன்னுதலார்' என்றும். ‘ஒருங்கொவ்வா' வென்றுங் கூறினார்;

மேன்மாசினும் மனமாசு தீயதாய் மேற்புறத்தைப் பின்னுந் தீதாக்கி ஊறுவிளைத்தலின், தலைவி பெரிதஞ்சினாள்;

‘நீராடா' தென்னுங் குறிப்பால் இவ்வச்சமும், பரத்தையர் இழிவுடையராய்த் தன்னோடு ஒவ்வாமையும், ஆனால் தலைமகன் ஒப்புக் கருதினமையும், கணவர் எத்துணைத் தவறுடையராயினும் கற்புடை மகளிர் அவரது திருத்தம் விரும்புவரல்லது வெறுத்து வேறாவரல்ல ரென்பதும், பிறவும் பெறப்படும்.

இது, பரத்தையர் மாட்டுப் பிரிந்து வந்த தலைமகனோடு ஊடிய தலைமகள் தன்னுட் கூறியது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-23, 6:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே