இல்லையே உய்வதற்கு உய்யா விடம் - பழமொழி நானூறு 280

நேரிசை வெண்பா

குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள்
பொய்யற்ற ஐவரும் போயினார் இல்லையே
உய்வதற் குய்யா விடம். 280

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆரவாரித்து உரைத்தலின் அவரால் பிணித்துக் கொள்ளப்பட்டார் அவர் எண்ணம் பழுதுபட அவர் பிணிப்பினின்றும் தப்பி எழுந்து உய்ந்து செல்லினும் செல்வர்.

அரக்காற் செய்யப்பட்ட மாளிகையின் உள்ளே யிருந்த குற்றமற்ற பாண்டவர் ஐவரும் தீயினின்றும் தப்பி நிலவறையின் வழியே சென்றனர்.

ஆதலால், பிழைத்தற்குரிய உயிருக்கு பிழைக்க முடியாத இடம் என்று ஒன்றும் இல்லை.

கருத்து:

ஊழ்வலியுடையார் எத்தகைய இடையூறுறினும் உய்வர்.

விளக்கம்:

குரைத்தல்: மரபுச்சொல். அவர் இழிபு விளக்கிய வந்தது. இது, தீய எண்ணமில்லார் போன்று அவர் நம்புமாறு ஆரவாரித்துப் பேசுதல்.

மிக்க ஆரவாரம் ஐயத்திற்கிடம் என்று அறிய வேண்டும். கொளப்பட்டார் என்றது அவர் ஆரவாரத்தை நம்பி, பிணிக்கப்பட்டாரை. கோள் என்றது அவரைப் பிணித்துத் துன்புறுத்த நினைத்த நினைவை. 'போகினும்' என அவர் போகாதவாறு பிணித்தலின் திண்மை குறிப்பிடப்பட்டது.

இனி, போகினும் என்றதற்கு ஊழ்வலியுடையாராதலின் அவர் பிணித்த பிணிப்பையே தமக்கு நன்மை தருவதாக ஆக்கிச் செல்லினும் செல்வர் எனலுமாம்.

பொய், குற்றங்களைந்தனுள் ஒன்று ஆதலின், குற்றம் எனப் பொருள் கூறப்பட்டது. 'உய்யாவிடம் இல்லை' என்பது பிழைக்கின்ற உயிருக்குப் பிழைக்க முடியாத இடம் என்று ஒன்றுமில்லை. எல்லாம் உய்தற்குரிய இடமேயாம். ஐவரும் உய்ந்தார் எனச் சான்று காட்டியவாறு.

'இல்லையே உய்வதற்கு உய்யாவிடம்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-23, 7:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே