புறப்படுவாய் நீ
புறப்படுவாய் நீ புறப்படுவாய்!
புதுமைகள் செய்யப் புறப்படுவாய்
கல்வி என்ற ஒளிவிளக்கை
கையில் ஏந்தி புறப்படுவாய்!
பள்ளி என்னும் அறிவாலயம்
அள்ளித் தந்திடும் ஆற்றலையே!
இச்சைக் கொண்டு நீயுமதை
இனிமை மிகவே பயின்றிடுவாய்!
வித்தைக் கற்று உலகினிலே
உச்சம் தொட்டு வாழ்ந்திடுவாய்
வெற்றிப் பூக்கள் பறித்திடவே
விரல்கள் உண்டு உன்னிடமே
சுற்றி நின்ற இடர்களைநீ
வெற்றிப் படியாய் மாற்றிவிடு
சரித்திரம் உனக்கு குவிந்துவிடும்
தரித்திரம் விட்டு விலகிவிடும்
உன்னில் பற்பல திறனுண்டு – அதை
உனக்குள் முடக்கி என்னபயன்?
உறங்கி நீயும் கிடந்தாலே
உன்னில் சிலந்தி கூடுகட்டும்
எழுந்து நீயும் நடந்திட்டால்
இமயமும் அஞ்சி விலகிவிடும்
வெற்றி உன்னை நாடிவரும்
வையம் உன்னை தேடிவரும்
ஆயிரம் வாய்ப்புகள் உனக்குண்டு
அத்தனையும் நீ வென்றுஎடு
சாதனைப் பூக்கள் பறித்திடவே – நீ
சோதனைப் படியில் ஏறிநட
ஊக்கம் கொண்டு உழைத்திட்டால்
ஆக்கம் உந்தன் தோள்தட்டும்
உலகம் இருப்பது உனக்காக
உழைப்பால் அதைநீ விலைபேசு
உறக்கத்தையே நீ உறங்கவிடு
ஓய்வினை அதன்மேல் போர்த்திவிடு
துவண்டு விடாதே தொல்விகண்டு – அது
வெற்றியைத் தந்திடும் கற்கண்டு
தடைகளை உனது படையாக்கு – அதில்
வெற்றியை உனது விடையாக்கு
உயரத்தில் உள்ளது இமயமலை – அதில்
அமைந்திட வேண்டும் உனதுதலை.
பாவலர். பாஸ்கரன்