கனவுவரும்
தூக்கத்தின் கனவெல்லாம்
தொலைந்துவிடும் விழித்தவுடன்
தூங்காமல் காணுவதே
தோல்விதனை வென்றுவிடும்.
நோக்கமுடன் இருக்கவேண்டும்
நெஞ்சிலெழும் கனவெல்லாம்
தேங்காமல் அவைநடக்க
சோர்வுதனை விட்டொழிப்பாய்.
எட்டாத கனவுகளை
ஏரெடுத்துப் பார்க்காமல்
எட்டுகின்ற எண்ணங்களை
ஏற்றிடுவாய் இதயத்தில்,
முட்டிமுட்டி மோதுவதால்
மண்டையதும் உடைந்துவிடும்
எட்டத்திலே தள்ளிவிட்டு
இன்பநிலை அடைந்திடுவாய்.
கனவுவரும் கவிஞருக்கு
கற்பனையும் சேர்ந்துவரும்
நனவாகி அவையென்றும்
நடைபயின்று செல்லாது
கனமாகி அவையாவும்
காலமதைக் களவாடும்
மனந்தன்னை மண்ணாக்கி
மதிப்பிழக்க வைத்துவிடும்.
பணம்பணமாய் சேர்ப்பதுதான்
பெருமையென்று எண்ணாதே
குணமிருந்தால் என்றென்றும்
கோபுரமாய் உயர்ந்திடலாம்
கணக்காக காலமதில்
கவனமுடன் வாழ்ந்துவிடு
பிணக்கெதுவும் உனைஅண்டா
பெருமையிலே நின்றுவிடு !
நெட்டையாகும் கனவிதனை
நெஞ்சத்திலே கொள்ளாமல்
ஒட்டிவந்து உறவாடும்
கனவுதனில் மகிழ்ந்துவிடு
வட்டமிடும் கழுகினைப்போல்
வாடவைக்கும் கனவுதனை
எட்டத்திலே தள்ளிவிட்டு
இன்பமுடன் உ.ழைத்துவிடு !