விடைபெறுதல்
விடையறியா வினாக்கள்!
தடைகுறையா ஏமாற்றங்கள்!
கைநழுவிய வாய்ப்புகள்!
எள்ளி நகையாடும் இயலாமைகள்!
நிறைவேறா ஆசைகள்!
கறைபடிந்த காலங்கள்!
அத்தனையும் கடந்து ,
நான் போகின்றேன்!
ஒழிந்துபோன காலத்தை
கிழித்தெறிந்து,
பழிதீர்க்கப் போகின்றேன்!
உடலென்ற ஒன்றுக்காய்
ஒழிந்திருந்த காலம்
துளியும் எனக்கு இஷ்டமில்லை!
ஒளியை விழுங்கி ஏப்பமிட்டு
இருள் குடிக்கப்போகின்றேன்!
வெளிச்சத்தில் தொலைத்தவற்றை
பெருவெளியில் தேடப்போகின்றேன்!
மரித்துப்போன மனதுடன்,
மரத்துப்போன உடல்
தினம் நடத்தும் போராட்டங்கள்
இனியும் வேண்டாம்!
உடல் துறந்து உவகை தேடி
என் ஆன்மா பயணிக்கட்டும்!
உயிர்பற்றிருந்த நான்
உயிர் பற்றறுத்து உயரப்போகின்றேன்!
வேஷப்பார்வைகள் தாண்டி
விண்ணில் பறக்கின்றேன்!
கோஷங்கள் ஏதுமின்றி
ஏகாந்தமாய் மிதக்கின்றேன்!
ஆர்ப்பரிப்புகள் எதுவுமின்றி
அழகாக துயிலுகின்றேன்!
அசைவற்ற நிலையிலே
ஆன்மாவில் லயிக்கின்றேன்!
விடைபெறுகின்றேன்!