பேரழகு
மலையோடு முகில்வந்து தங்கும் - எங்கள்
மலைநாட்டில் பேரழகுப் பொங்கும்
இலைமீது பனித்துளிகள் தேங்கும் - அதை
இறைவனுக்காய்ச் சூரியனும் வாங்கும்
சிலையாகக் கற்பாறை ஏங்கும் - அதில்
சிற்பங்கள் மறைவாகத் தூங்கும்
விலைவாசிப் போலியற்கைப் பாங்கும் - நீர்
வீழ்ச்சிகளாய் விரைந்தோடி யோங்கும்
*
அருவிகளின் சலசலப்புச் சாடல் - அது
அனைத்துயிரும் நீரருந்த நாடல்
கருவியின்றி இசையமைக்கும் பாடல் - புதுக்
கவிஞனுக்கு கருவழங்கும் கூடல்
குருவிகளும் கீச்சொலியாய்த் தேடல் - தம்
கூட்டுக்குள் மகிழ்ச்சியுறும் ஊடல்
உருகவிடும் மனமயிலி னாடல் - வர
உருவெடுத்த மழைமுகிலின் மூடல்
*
சூரியனை மலையுச்சிச் சூடும் - ஒரு
சுகமான இளங்காலை கூடும்
நேரினிலே சந்திக்கத் தேடும் - மன
நிம்மதியை வைகறையும் போடும் காரியங்கள் யாவையுமே நாடும் - நம்
கண்ணெதிரில் குயில்வந்து பாடும்
ஊரிளுளப் பள்ளமுடன் மேடும் - நம்
ஒவ்வொருவர் வாழ்வதனைச் சாடும்